உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
164

❖ மறைமலையம் - 3 ❖


ஒருகால் மாதர் ஒருவர் தமது மனைக்கு அருகிலிருந்த ஒரு காட்டில் உலவிவந்து தமதில்லத்தே நுழைந்து தாம் வைத்திருந்த முதன்மையான திறவுகோல் ஒன்றைத் தமது சட்டையிலிருந்து எடுக்கக் கையிட்டார். ஆனால், அஃது எங்கேயோ விழுந்து போயிற்று.பிறகு அவர் மனத்துயரத்தோடும் உறங்குகையில், அத் திறவுகோல் ஒரு மரத்தின் வேரண்டையிற் கிடப்பதாகக் கனவு கண்டார். மறுநாட் காலையில் அவர் தாம் கனவிற் கண்ட மரத்தின் வேரண்டையிற் சென்று பார்க்கச் சாவி அங்கே அகப்பட்டது.

ஏராளமான நிலச்சொத்திற்குரிய ஒருவரின் தந்தையார் தமது காலத்தில் தீர்வை செலுத்தாமையால், அவர் தம் புதல்வர் அத் தொகை முழுதும் செலுத்தல்வேண்டும் என்று அவர்மேல் வழக்குத் தொடரப்பட்டது. இது நியாய வழக்கன்று என்றும், தம் தந்தையால் தீர்வை செலுத்தப்பட்டதற்கு முத்திரைச் சீட்டு இருக்கவேண்டுமென்றும் அவர் நினைத்துச் சாதனங்கள் உள்ள இடங்களை ஆராய்ந்து பார்த்ததோடு தம் தந்தையாருக்காக வழக்கு நடத்தினவர்களையுங் கேட்டுப்பார்த்தார்; ஆனால் தமக்கு அனுகூல மாவதெதுவும் அகப்படவில்லை. வழக்குத் தமக்கு மாறாக முடியுங் காலமோ அணுகிவிட்டது. இதனால் அவர் மிகவுந் துயரம் அடைந்தவராய் ஒருநாள் உறங்குகையில் கனவிலே அவர் தந்தையாரின் உருவம் தோன்றி மனவருத்தத்திற்குக் காரணம் யாதென்று வினவியது. அவர் தமது வருத்தத்தின் காரணத்தைத் தெரிவித்ததோடு, நியாயமின்றியே ஒரு பெருந்தொகையைச் செலுத்த நேருவது தமக்குப் பெரிதும் இன்னாததாய் இருந்ததென்றும், தமக்கு அனுகூலமான சாதனம் எதுவும் கிடையாவிட்டாலும் அஃது அநியாயமென்றே றுதியாய்த் தோன்றிய தென்றுங் கூறினார். அதனைக் கேட்ட அவ்வுரு “மகனே! நீ சொல்லியது உண்மையே! நான் தீர்வை செலுத்தியதற்குரிய முத்திரைச் சீட்டுக்கள், இப்போது அலுவலினின்று விடுதிபெற்று இன்ன ஊரிலிருக்கும் இன்னார் பால் உள்ளன,” என்று கூறி, “ஒரு காரணம் பற்றி அவரை அச் சமயத்தில் என்னுடைய அலுவல் பார்க்க நியமித்திருந்தேன். மிகவும் பழமையாய்ப் போனமையால் அவர் அதனை மறந்து போயிருக்கலாம்; ஆனால் அவருக்கு ஒருகால் யான் பணங் கொடுக்கப் போயிருந்தபோது போர்த்துக்கேசியர் பொன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/197&oldid=1625182" இலிருந்து மீள்விக்கப்பட்டது