உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
166

❖ மறைமலையம் - 3 ❖

நொடியும் நாம் நினைக்கும் நினைவுகள் யாவை என்று ஆராய்ந்து பாருங்கள்! முன்நேரங்களிலும் முன் நாட்களிலும் முன் வாரங்களிலும் முன் மாதங்களிலும் முன் வருடங்களிலும் நம் அறிவின் எதிரில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளைப் பற்றிய எண்ணங்களும் நினைவுகளுமே இடைவிடாது நம்முள்ளத்தில் அடுத்தடுத்துத் தோன்றுகின்றன. ஒருநாளின் பிற்பகலிற் றோன்றும் நினைவுகள் அன்று முற்பகலில் நேர்ந்தவற்றைப் பற்றியனவாயும், அதற்கு முன்நாள் முன் வாரம் மாதம் வருடங்களில் நடந்தவற்றைப் பற்றியனவாயும் இருக்கின்றன. இவ்வுலகில் இப்பிறவியில் முன் நாம் அனுபவித்த இன்பங்கள் கவலைகள் மகிழ்ச்சிகளெல்லாம் கிளைத்தெழுந்து நம் அறிவைக் கவருகின்றனவல்லவோ? இந்நினைவுகளை யெல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால், இவற்றின் வேறாக நம்மிடத்திற் புதிதாக நிற்கும் நினைவு ஏதொன்றும் இல்லாமைக் காணலாம்; ஒவ்வொருகாற் புதிய நினைவுகள் சில தோன்றுமாயின் அவை அறிவிற் சிறந்தோரிடத்து மாத்திரமே காணப்படு மல்லால் மற்றையோரிடத்துத் தோன்ற மாட்டா. அறிவில் வல்லவர் பின்நாட்களில் தாம் புதிதாகச் செய்ய வேண்டுவதை முன்னே நினைவில் அமைத்து உருப்படுத்து வராதலால் அவர்க்கு மாத்திரமே வருநாள் நினைவு தோன்றும். இங்ஙனமாகக் கற்றார் கல்லாதவர் முதலான எத்திறத்தவர் மட்டும் காணப்படும் நினைவின் பாகுபாடுகளை நுணுக்கமாக ஆய்ந்து பார்ப்பவர்க்கு இப் பிறவியில் கனவினும் நனவினும் தோன்றும் நினைவுகளிற் பெரும்பாலன மேற்சென்ற பிறவிகளில் மேல்கீழ் உலகங்களிலும் இந் நிலவுலகத்திலும் அனுபவித்த அனுபவங்களின் பயனே யாமென்பதும், சிறுபாலன இப் பிறவியிலும் இனிப் பிறவியிலும் இனி வருவனவற்றின் முன் அனுபவங்களே யாமென்பதும் தெற்றென விளங்கும். விளங்கவே, மேலுலகங்கள் பலப்பல உண்டென்பதும், அவற்றின் கண்ணெல்லாம் நாமும் நம்மையொத்த உயிர்களும் வாழ்ந்து வந்ததும் இன்னும் வாழப்போவதும் உண்மையென்பதும் தாமாகவே பெறப்படும்.

மரணத்தின்பின் மனிதர்நிலை

-முற்றும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/199&oldid=1625190" இலிருந்து மீள்விக்கப்பட்டது