உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/248

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
215

இனி நடத்தற்றொழிலைப் பற்றிச் சிறிது சிந்திப்போம்.பெரும்பாலார் நடந்து செல்லும்போது தாம் நடப்பதாகவே உணர்வதில்லை. தம் உள்ளமானது பலவகைப்பட்ட பொருள்களைச் சிந்தித்தவண்ணமாயிருக்கத் தாம் அசைந்தசைந்து தளர்ந்த நடையிற் செல்கின்றார்கள். இவ்வாறு நினைவொரு பக்கமும் நடக்கும் முயற்சி மற்றொரு பக்கமுமாய்ப் பிளவுபடப் போவதனால் உயிராற்றல் பெரிதும் வீண்கழிந்து விடுகின்றது. நடக்குந் தொழில் உடம்புக்கு மிக்கவலிவினையும் உயிர்க்கு மிகுந்த கிளர்ச்சியினையுந் தருதற்கு உரியதாயிருக்கவும்,அதனிடத்தே மனத்தைப் பொருந்தவையாமல் பலவழியே ஓடவிட்டுச் செல்வதும், அதனால் நோய் வந்தபின் நோயின் காரணம் இங்ஙனம் மிக எளிதாயிருத்தலை உணராமல் அளவில்லாமல் மருந்துண்டு துன்புறுதலும் எவ்வளவு பேதைமை! நமதுடம்பை நோயணுகாமல் வைத்து வளர்க்கும் பலவகை முயற்சிகளுள் நடக்கும் முயற்சியைவிடச் சிறந்தது வேறில்லையென்று உடற்கூறுபாட்டு நூலை யுணர்ந்த புலவர்களும் மருத்துவ நூல் அறிஞர்களும் வற்புறுத்திச் சொல்கின்றார்கள்.

உடம்பை வலிவுறச் செய்வதற்கு மல்லர்கள் செய்யும் பழக்கங்களைவிட நடப்பதாகிய பழக்கமே மிகமேலான தென்றும், மல்லர் செய்யும் பழக்கங்கள் இயற்கைக்கு மாறு பட்டனவாயிருத்தலால் அவற்றால் தீமையே உண்டாகின்றன வென்றும்,நடைப்பழக்கமானது இயற்கையிலுள்ளதாயிருத்தலின் அஃதொன்று மட்டுமே உடம்பை இனிதுவளர்த்தற்குரிய நற்பழக்கமாகுமென்றும் பிராஞ்சு நாட்டுப் பேரறிஞர்களும் பகருகின்றார்கள். இவ்வளவு சிறந்ததாகிய நடைப்பழக்கமும் நினைவோடுகூடி நிகழாதாயின் அது சிறிதும் பயன்படாது போவதேயன்றி உடம்பின் வலிவையும் குறைப்பதாகின்றது. ஆகையால்,எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியிலும் நினைவு அழுந்துமாறு விருப்பத்தோடு செய்தல்வேண்டும்; வேண்டா வெறுப்பாய்ச் செய்தலும் ஆகாது.நினைவோடும் விருப்பத்தோடுங் கூடிச் செய்யும் காரியங்கள் செய்வார்க்குங் காண்பார்க்கும் எவ்வளவு உயர்ந்தனவாயும் மகிழ்ச்சி தருவனவாயுமிருக்கின்றன! மனவுருக்கத்தோடும் மனக்கிளர்ச்சியோடும் ஒருவன் செய்து முடித்த ஒரு காரியத்தினையும்,அவையிரண்டு மில்லாதவன் ஒருவன் வேண்டா வெறுப்பாய்ச் செய்து முடித்த மற்றொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/248&oldid=1625677" இலிருந்து மீள்விக்கப்பட்டது