உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
216

❖ மறைமலையம் - 3 ❖

காரியத்தினையும் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் சொல்வதன் உண்மை தெளிவாய் விளங்கும். முன்னவன் செய்தது திருத்தமாயும் அழகாயும் பார்க்கப் பார்க்க மகிழ்ச்சி தருவதாயும் இருக்கும். பின்னவன் செய்தது பிழையுள்ளதாயும் அழகின்றி அருவருப்புத் தோற்றுவிப்பதாயும் இருக்கும். இங்ஙனமே, நினைவோடும் விருப்பத்தோடும் நடந்து செல்வோன் நடையின் அழகையும், அவையின்றித் தளர்ந்து செல்வோன் நடையின் இழிவையும் கண்டுகொள்க. அதனால் நினைவும் விருப்பமும் வைத்து நடக்கும் நடையின் மேன்மை நன்கு புலப்படும்.

இனிக் கையாற் செய்யுந் தொழிலைப்பற்றிச் சிறிது பேசுவோம். கையாற் செய்யப்படுந் தொழில்கள் பெரும்பாலும் மனத்தின் சேர்க்கையின்றி நடை பெறுவதில்லை. காலின் றொழிலாகிய நடத்தல் குழவிப்பருவம் முதற் கொண்டே பழகியதாகலின்,தம் உணர்வை மிகுதியுஞ் செலுத்தாமல் அனைவரும் அதனைச் செய்து வருகின்றார்.மேலும்,காலினாற் செய்யப்படுந் தொழில்கள் நடத்தல், ஓடல், இருத்தல் முதலான சிலவேயன்றிப் பலவில்லை கையினாற் செய்யப்படுந் தொழில்களோ ஒருவனது அறிவின் வளர்ச்சிக்கு ஏற்ப நாடோறும் புதியன புதியனவாய்த் தோன்றும் இயல்பை உடையன.புதிது புதிதாய்த் தோன்றும் செய்கை ஒவ்வொன்றும் மனவுணர்வோடு கூடியே நடைபெற வேண்டியிருத்தலிற் பெரும்பாலும் கைகளின் றொழிலெல்லாம் மனவுணர்வோடு ஒருங்கியைந்தே நடைபெற்று வருகின்றன.

யாழ்,முழவு,புல்லாங்குழல் முதலான இசைக்கருவிகளை வாசிப்பதில் எவ்வளவுதான் பழக்கம் ஏறப்பெற்றவர்களாய் இருந்தாலும், அவற்றினிடத்தே பலவகை இசைகளை எழுப்பிப் பாடுங்காலங் களிலெல்லாம் அவர்கள் தமது கருத்தைத் தம் கையிலும் கைவிரல்களிலும் பொருந்த வைத்தே அவற்றை இயக்கி வருகின்றார். பலவகை உணவுப்பொருள்களைச் சமைப்பதில் எவ்வளவு தான் திறமை வாய்ந்தவர்களாய் இருந்தாலும் சமையல் செய்யுங் காலங்களிலெல்லாம் சமையற்காரர் தம் கைகளில் தமது நாட்டத்தை முழுதும் வைத்தே அத்தொழிலைச் செய்து போதருகின்றார். படம் எழுதுவதிற் கைதேர்ந்த, ஓவியக்காரர் நிலத்தின் பலவகைத் தோற்றங்களையும் உயிர்களின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/249&oldid=1625678" இலிருந்து மீள்விக்கப்பட்டது