உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
217

உருவங்களையுந் தீட்டுகையில் அவர்கள் எவ்வளவு உன்னிப்போடு தமது கையை இயக்குகின்றாரென்பதை அருகிருந்து நோக்கும் எவரும் எளிதிற்றெரிந்து கொள்ளலாம். சிலம்ப வித்தையிற் பழகினவர்களும் கோல்களைக் கையிலெடுத்துச் சுழற்றுஞ் சமயங்களில் அவர்களின் கையுங் கருத்தும் ஒன்றுபட்டு நடத்தலைக் கண்டு வியவாதவர் யாருமிலர். இவைபோன்ற நிகழ்ச்சிகள் இன்னும் பலவற்றாற் கையின் றொழிலெல்லாம் மிகுதியாய்க் கருத்தின் றொழிலை ஒட்டியே இயங்கும் முறை நன்கு தெளியப்படும்.

இங்ஙனம் ஒருவனது அறிவை ஒருமுகப்படுத்தி அதனை நுட்பமாக வளர்த்து வருதற்கண் கையின்றொழில் நிரம்பவுஞ் சிறந்து நிற்கக் காண்கின்றோ மாதலால், இத்துணைச் சிறந்த தாகிய இக்கையின் றொழிலைக் கருத்தின்றி வீண்செயல்கள் செய்யும்படி ஏவிப் பழகுதல் சிறிதும் ஆகாது. ஒருவர் எதிரி லிருக்கும்போதாவது, தனியேயிருக்கும் போதாவது கையில் துரும்பு, வெற்றிலைக் காம்பு முதலியவற்றை எடுத்துக் கிள்ளுதலும், கையாற் றலையைச் சொரிதலும், மற்ற உறுப்புகளைத் தடவுதலும், புத்தகங்களை எடுத்து மடக்குதலும் பலரிடத்தில் வழக்கமாய்க் காணப்படுகின்றன. இன்னோரன்ன வீண்செயல்களாற் கருத்தின் வழியே நடக்குங் கையானது அதனை விட்டு முக்கால்வாசி பிரிந்து இயங்குதலால், அறிவாற்றலானது வறிதே கழிந்து போகின்றது; அறிவின் வளர்ச்சியையும் இவை சிறிது சிறிதாத் தடைசெய்து நிற்கின்றன.

இதுபோலவே,வேறு சிலர் பிறர் முன்னிலையிற் காலையும் தாடையையும் ஆட்டுகின்றனர். மற்றுஞ் சிலர் தனியே யிருக்கும்போதுந் தம்மை மறந்து இதழைக் குவித்து ஊதுகின்றனர். பின்னுஞ் சிலர் நிற்கும்போதும் இருக்கும் போதும் ஆடிக்கொண்டும், அசைந்துகொண்டும் இருக்கின்றனர். இன்னுஞ் சிலர் விரல்களை ஒன்றோடொன்று சேர்த்துத் தேய்க்கின்றனர். மேலுஞ் சிலர், பிறர் எதிரே செய்யத்தகாத சில சிறு செயல்களைப் புரிகின்றனர். இன்னோரன்ன வீண் சிறு செயல்கள் மன அமைதியைப் பெறவேண்டுவார்க்கு இடையிடையே தடைகளாய் இருத்தலின் இவற்றை ஊன்றிப் பார்த்து இவை தங்கண்ணே நிகழாமல் நீக்கிக்கொள்ளுதல் அவர் தமக்கு இன்றியமையாத கடமையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/250&oldid=1625679" இலிருந்து மீள்விக்கப்பட்டது