உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
222

❖ மறைமலையம் - 3 ❖

வெயிலில் நெடுந்தூரம் ஒரு பெருஞ் சுமை தூக்கிச் சென்றவன் ஒரு நறுமணப் பூஞ்சோலையை அடைந்து அதன்கண் உள்ள குளத்தில் இனிய தண்ணீரை விடாய்தீரப் பருகிக் கரைமருங்கின் அடர்ந்து நிற்கும் மரத்தின் குளிர்நிழற்கீழ்ப் புன்மேல் அயர்ந்து கிடக்கும் நிலையை எண்ணிப் பாருங்கள்!

அவ்வாறு கிடக்குமவனை அணுகி அவன் கையை மெல்லெனத் தூக்கிக் கீழ் விடுவீர்களாயின் அது துவண்டு நிலத்தே விழும்; அவன் காலையும் அங்ஙனமே சிறிது தூக்கி விடுவார்களாயின் அதுவும் அவ்வாறே துவண்டு அப்புன்மேல் விழும்; இவ்வாறெல்லாம் அவனது உடம்பின்கண் உள்ள உறுப்புகள் அவன்வசம் இன்றிக் கிடப்ப, அவன் நிரம்பவும் அமைதியாய் இருக்கும் நிலையே உண்மையான இளைப்பாறுதலாகும். இளைப்பாறுதற்கெல்லாம் தூக்கம் இன்றியமையாது வேண்டப்படுவதன்று; தூக்கம் இன்றியும் இளைப்பாறலாம், தூக்கத்தோடும் இளைப்பாறலாம்; ஆனால், தூங்கி எழுவ தானது மிகுந்த இளைப்பாறுதலைத் தரும்; நிரம்ப அயர்ந்து தூங்கி எழுந்தவனுக்கு மிக்க சுறுசுறுப்பும் மனக்கிளர்ச்சியும் உண்டாகும். நரம்புகளை முழுதும் இளக்கி ஒன்றும் நினையாமல் அமைதியோடிருக்கக் கற்றுக் கொண்டவனுக்கு இனிய தூக்கமானது அவன் நினைத்தபோதெல்லாம் வரும். மேல்நாட்டில் நிகரற்ற போர்வீரனென்று பலரானும் பெரிதும் பாராட்டப்பட்டு வந்த நெப்போலியன் என்னும் மன்னர் மன்னன் தன் படைவீரர் பீரங்கி வெடிதீர்ந்துக் கத்தியும் வல்லையமுங்கொண்டு பெருமுழக்கத்தோடும் தம் பகைவரோ டெதிர்த்து நிரம்ப மும்முரமாய்ப் போர் இயற்றுங் காலங்களில், அவர்களின் இடையே தான் நினைத்த போதெல்லாம் பத்து நிமிடமேனும் கால்மணிநேரமேனும் அமைதியோடும் நன்றாகத் தூங்கி விழித்து எழுவனாம். இங்ஙனமே தமக்கு அல்லும் பகலும் இடைவிடாதிருந்த பவ அலுவல்களின் நடு நடுவே தாம் நினைத்தபோதெல்லாம் நன்றாகச் சிறிதுநேரம் அயர்வுதீரத் தூங்கியெழுந்து, பின்னர் அவ்வலுவல்களை நுண்ணறிவோடும் மனக்கிளர்ச்சியோடும் செய்து முடித்துப் புகழோடு நீண்டநாள் உயிர்வாழ்ந்திருந்த அரசர்பலர் வரலாறுகளையும் அமைச்சர் பலர் வரலாறுகளையும் படித்தறிந்திருக்கின்றோம். அது கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/255&oldid=1625684" இலிருந்து மீள்விக்கப்பட்டது