உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
224

❖ மறைமலையம் - 3 ❖

அறிவு தன்னை மறந்த தூக்கத்தில் வலிவுகுறைந்து மழுங்கிப் போவதால், அலுப்பால் அயர்ந்த தூக்கம் உள்ளவனுக்கு மறதி மிகுதியாய்க் காணப்படுகின்றது.ஆதலால்,மறதி வராமைப் பொருட்டுத் தன்னை மறந்த தூக்கத்தை நீக்கல்வேண்டும்,தன்னை மறந்த தூக்கம் வராமைப்பொருட்டு அலுப்பினை நீக்கல் வேண்டும், இனி அலுப்பு வராமைப்பொருட்டுக் கடுக உழைத்தலை நீக்கல் வேண்டும்.

அங்ஙனமாயின், கடுகிய உழைப்பினால் ஆகவேண்டும் முயற்சிகள் பின்னை எவ்வாறு நடைபெறுவதெனின்; இந்நூலின் கட்சொல்லப்படுவன அறிவால் மேன்மை அடைய விரும்புவாரை நோக்கினவேயல்லாமல்,அறிவுகுறைந்து மாடுபோல் உழைப்பவரை நோக்கின் அல்லாமையால் அதனை இங்கே ஆராய வேண்டுவதில்லை.மேலும், மக்களிற் பலரும் பலதிறப்பட்ட இயற்கை யுடையவர்களாய்ப் பிறவிகடோறும் சிறிது சிறிதாக அறிவுவிரியப் பெற்று வருவதனாலும், எல்லாரும் ஒரேகாலத்தில் ஒரேவகையான அறிவு பெறுதல் காணப் படாமையாலும்,அவரவர் தமது இயற்கைக்கு இசையவே பொருள்களையும் அவற்றை உணர்த்தும் நூல்களையும் விரும்பி வருவதலாலும், உழைப்பு ஒன்றிலே மட்டும் கருத்து வைத்தவர்கள் அதனைக் கடந்து அறிவு நிலைக்குவர ன்னும் பலபிறவிகளை யெடுக்கவேண்டுமாதலாலும் இங்கே சொல்லப்படுவன அறிவுநிலையில் உள்ளார்க்கே இணக்கமா வனவாம் என்க. இன்னும் உழைப்பு நிலையில் உள்ளவர்கள் அறிவு முதிர முதிரப் பலவகை இயந்திரங்களை அமைத்து அவற்றின் உதவியாற் கடு முயற்சிகளைச் செய்து முடிக்க மாட்டுவார்கள்; அப்போது அவர்கட்கு அலுப்பு உண்டாகாமற்போம்.

மிகுந்த உழைப்புள்ள தொழில்களைச் செய்தற்கு யானை குதிரை எருமை எருது கழுதை முதலான விலங்குகளிருந்தும்,அவற்றைப் பயன்படுத்திக்கொள்ளாமல் ஏழைமக்களிற் பலர் வண்டியிழுத்தல் பெருஞ்சுமை சுமத்தல் முதலான கடுந்தொழில் களைத் தாமாகவே செய்து தம்மை விலங்கினங்களினுந் தாழ்ந்தவராகச் செய்து கொள்கின்றனர்! யானை குதிரை எருது முதலியவை வாங்கவும் அவற்றிற்குத் தீனி கொடுத்துப் பாதுகாக்கவுங் கையிற் பொருள்இல்லாமையால், அவர்கள் அங்ஙனந் தாமாகவே கடுந்தொழில் செய்கின்றன ராதலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/257&oldid=1625686" இலிருந்து மீள்விக்கப்பட்டது