உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
227

எவ்வளவு உழைப்புக் குறைந்தது! எவ்வளவு பொருட் செலவும் துன்பமும் காலக்கழிவுங் குறைந்தன! எவ்வளவு நலங்கள், எவ்வளவு இன்ப நுகர்ச்சிகள் மேலோங்கின! இவற்றையெல்லாம் எண்ணிப் பார்ப்பவர்க்கு உடலுழைப்பினும் அறிவு முயற்சியே பல்லாயிரம் மடங்கு சிறந்ததென்பதும் அறிவு முயற்சி யொன்றே உடலுழைப்பினையும் அதனால் வரும் இளைப்பினையுந் துன்பத்தினையுங் குறைத்து உயிர்களுக்கு அமைதியின்பத்தைத் தருமென்பதும் தெற்றென விளங்கும். ஆகவே,நல்ல தூக்கத்தை வருவித்தற் பொருட்டு உடல்வருந்தி யுழைக்கும் முறையைக் கைக்கொள்ளுதல் ஆகாது. நரம்புகளை இழுத்துப் பிடியாமல் தளரவிட்டு அமைதியோடு ஏதொன்றும் நினையாமற் படுத்திருந்தால் இனிய தூக்கந் தானாகவே வரும்.

இனி, அசைவில்லாத கருவிகள் பழுதுபட்டுப் போகு மென்பது மேலே சொல்லப்பட்டமையால், மிகுந்த உழைப்பில்லாமல் தத்தம் உடம்பின் அளவுக்கு ஏற்பச் சிறுசிறு முயற்சிகள் செய்து வருவது அறிவு முயற்சியுடையார்க்கு இன்றியமையாததாகும். அறிவு முயற்சியும் உடம்புமுயற்சியும் உடையார்க்கு வாழ்நாள் நீளும்,நோய் அணுகாது மன வலிமை மிகும். அறிவு முயற்சியுடையார்க்கு நாடோறும் சிறிது தூரம் நடந்துபோய் வரும்பழக்கம் மிகச் சிறந்ததாம் என்பதை மேலே குறித்திருக்கின்றோம். அதனோடு, விடியற்காலையில் தோட்ட வேலையும் செய்யப் பழகுதல் அவர்க்கு மேலான நன்மையைத் தரத்தக்கதொன்றாம். கதிரவன் புலரிக் காலையிற் பொன்னொளி பரப்பிக்கொண்டு தளதளவெனக் கீழ்த்திசையில் எழும்போது, பறவைகள் மரம்நிறைந்த தோட்டங்களிலுந் தோப்புகளிலும் மிகுந்த சுறுசுறுப்போடு கூச்சலிட்டுக்கொண்டு கிளைக்குக் கிளை பாய்வதும் தோட்டக்காரர்கள் ஏற்றப்பாட்டுப் பாடியபடியே ஏற்றம்பிடித்துக் கிணறுகளிலிருந்து தண்ணீர் இறைக்க அந்நீர் பசும்புல் படர்ந்த கால்களின் வழியே சென்று வாழை தென்னை பாக்கு மா பலா முதலியவற்றிற்கும் பூஞ்செடிகளுக்கும் பாய்வதும், தோட்டங்களிலுள்ள அலரி ரோசா கருவிளை மல்லிகை முல்லை சம்பங்கி பிச்சி முதலிய பலவகைப் பூஞ்செடி கொடிகளும் சிவப்பு வெள்ளை நீலம் மஞ்சள் முதலான பலதிறப்பட்ட நிறங்களோடுங் கண்ணைக் கவரத்தக்க வகையாக மலர்ந்து மணங்கமழ்வதும் மரஞ்செடி கொடிகளெல்லாம் பச்சைப் பசேல் என்ற இலைகளால் தழைத்து மெல்லென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/260&oldid=1626068" இலிருந்து மீள்விக்கப்பட்டது