உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
228

❖ மறைமலையம் - 3 ❖

காற்றால் மகிழ்வுடன் அசைவதும் ஆன இயற்கைப் பொருள்களின் பொலிவையுந் தோற்றத்தையும் தோட்டங்களிலுஞ் சோலைகளிலும் அல்லாமல் வேறெங்கே காணக் கூடும்?

கவலையுந் துன்பமும் இன்றிக் கடவுளின் அருள் அமைப்பைப் பெற்று அழகோடும் மகிழ்வோடும் விளங்கும் உயிர்களின் தோற்றப்பொலிவை இளமரக்காவின்கண் உள்ள மரஞ்செடி கொடிகளிலன்றி வேறெங்கே காணமுடியும்? நோயாலும் வறுமையாலும் மனக்கவற்சியாலும் மாழ்கும் இம்மக்கட் பரப்பினிடையே கிடந்து துன்பத்தில் உழன்றவர்கள் அத்துன்பம் நீங்கி ஆறுதல் பெறவிரும்பினால் அதனைத் தருதற்குரிய உண்மையன்பர்களை மரஞ் செடி கொடிகளிலன்றி வேறெங்கே காண இயலும்? குற்றமற்றவராய்த் தம்மாலியன்ற இலை பூ காய் கனி கிழங்கு முதலிய பரிசுகளைச் சிறிதுங் கைம்மாறு கருதாது மகிழ்ந்து ஈயும் இவ்வோரறிவுயிர்களினுஞ் சிறந்த அன்பர்களை மக்களினும் மற்றை உயிர்களினும் பெற்றுக் கொள்ள இசையுமோ?

ஆதலாற், களங்கம் அற்று இன்ப வடிவாய்த் திகழும் இவ்வினிய உயிர்களினிடம் பழகும் வகையைப் பின்பற்றுதல் அறிவும் இன்பமும் ஆற்றலும் மிகவேண்டுவார்க்கு முதன்மையான கடமையாம்.விடியற் காலையிலெழுந்த வுடனே தோட்டங்களுக்குஞ் சோலை களுக்குஞ் சென்று இவ்வுயிர்களின் பச்சிலைத் தோற்றப் பொலிவைக் கண்டால் கண்கள் குளிரும், உள்ளம் கிளர்ச்சி அடையும், கவலையுந் துன்பமுமான நினைவுகள் இருந்தவிடமுந் தெரியாமல் மறைந்தொழியும்.அம் மரஞ்செடி கொடிகளுக்கு நீர் பாய்ச்சுவதும், அவற்றைச் சுற்றியுள்ள மண்ணைக் கிளறி அவற்றிற்கு எரு ஊட்டுவதும், பயன்படாது முளைத்து அவற்றின் வளர்ச்சிக்குத் தடையாய் இருக்கும் பூண்டுகளைக் களைந் தெறிவதும் எவ்வளவு இனிப்பான வேலைகள்! இவ்வேலைகளைச் செய்யும் அறிஞர்க்கு அறிவும் உடம்புஞ் செழிக்குமாதலால் இஃது அவர்களால் உறுதியாகச் செயற்பால தொன்றாம். கவலையற்ற பயிர்த்தொழிலிற் பழகுங் குடியானவர்கள் நீண்டநாள் நோயின்றி உயிர்வாழக் காண்கின்றோ மாகையால், அறிவோடு இனிய வாழ்நாளும் பெற விழைபவர்கள் பயிர்த்தொழில் பார்ப்பதை இழிவாக நினைத்தலாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/261&oldid=1626069" இலிருந்து மீள்விக்கப்பட்டது