உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
232

❖ மறைமலையம் - 3 ❖



6.நினைவை முனைக்க நிறுத்தல்

இங்ஙனம் அமைதியாயிருக்கப் பழகிய பின்னர், நினைவை முனைத்து நிற்கும்படி பழக்கத் துவங்கல் வேண்டும். ஒன்றனைச் செய்தற்குரிய முயற்சியோடு நினைவு முன்வந்து நிற்றலையே ‘நினைவு முனைத்து நிற்றல்' என்று கூறுகின்றோம். கல்வியில் வல்லார் ஒருவர் அவை ஏறிப் பேசுகையில் அவர்தம் அறிவு எவ்வளவு முயற்சியோடு முன்வந்து நிற்கின்றதென்பதனை அவருடைய பார்வையிலும் சொல்லிலும் கை மெய் முகம் முதலிய உறுப்புகளின் அசைவுகளிலும் நன்கு கண்டறியலாம். இவ்வாறு முனைத்து நின்றாலல்லாமல் அவர் தாம் சொல்ல நினைத்தவைகளை ஒருவழிக் கொணர்ந்து திறம்படப் பேசுதல் ஏலாது. தாம் கூறவெடுத்த பொருளில் அவரது அறிவு எவ்வளவுக்கு முனைத்து நின்று விளங்குகின்றதோ, அவ்வளவுக்கு அவர் கூறும் பொருள் விளக்கமுடையதாகிக் கேட்பார்க்கு அறிவையும் இன்பத்தையுந் தரும். இன்னும் இந்நினைவு முனைப்பின் அருமையையும் ஆற்றலையும் புலங்கொளக் காணல் வேண்டின், உயர்ந்த வெள்ளிய சலவைக் கல்லில் அழகின்மிக்க 6.நினைவை முனைக்க நிறுத்தல் பெண்மகள் உருவத்தைச் செதுக்குங் கற்றச்சனும்,மலையடுத்த பள்ளத்தாக்கின் கண் உள்ள ஒரு கானகத்தின் இடையிலே இளைய ஓர் அரசனும் அரசியும் ஒரு மான்கன்றிற்குப் புல் ஊட்டும் கவர்ச்சிமிக்க தோற்றத்தை ஓர் இரட்டுத் துணியின்மேல் வரையும் ஓவியக்காரனும், வீணையின் நரம்புகளைத் தெறித்துத் தேனினுங் கரும்பினும் இனிக்கும் இசைகளை மிழற்றுங் கைவல் பாடினியும் தங்கண்ணுங் கருத்துங் கையும் ஒருமுகமாய் நிற்க நினைவு முனைத்து முயலுந் திறத்தின்கண் வைத்துத் தெளியக் கண்டுணரலாம். ஆ! நினைவு முனைத்து நிற்கப் பெறுவார்க்கு இம்மையினும் மறுமையினும் ஆகாத தொன்றில்லை. உலக வாழ்க்கையிற் பல பகுப்பாய் நின்ற துறைகளிலும் மேம்பட்டு விளங்கிய மேலோரெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/265&oldid=1626073" இலிருந்து மீள்விக்கப்பட்டது