உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
233

தமதறிவை முனைக்க நிறுத்தும் ஆற்றலிற் சிறந்தவர்களேயா மென்பது அவருடைய வரலாறுகளை யுணர்வார்க்கு நன்கு விளங்கும்.

அங்ஙனமாயின் நினைவை முனைக்க நிறுத்துதலுக்கும் நினைவை ஒருவழி நிறுத்துதலுக்கும் வேற்றுமை யாதென்றால்; உள்ளம் பல நினைவுகளால் இழுக்கப்பட்டு அங்கும் இங்குமாய்ச் சிதர்ந்து போகவிடாமல், அஃது ஒரு நினைவோடு நிற்குமாறு செய்தலே நினைவை ஒருவழி நிறுத்துதலாகும்; அங்ஙனம் நின்ற நினைவு ஒருமுயற்சியுடையதாய் ஒரு பயனைத் தருமாறு முன் நிற்கச் செய்தலே நினைவை முனைக்க நிறுத்துதலாகும். ஒருவன் தொலைவிலுள்ள தன் நண்பன் ஒருவனை நினைத்துக் காண்டிருந்தது நினைவை ஒருவழி நிறுத்துதலாகும்; பிறகு, அந்நண்பன் தனக்கு உடனே ஒரு கடிதம் எழுதியனுப்பக் கடவன் என்று முயலும் நினைவோடிருந்த நிலையே நினைவைமுனைக்க நிறுத்துதலாகும். ஒருவழி நின்ற நினைவு அவன் தான் கருதிய பயன்களை விளைவியாது, முனைத்து நின்ற நினைவோ அவன் விரும்பிய பயன்களை யெல்லாம் விளைவிக்கும் இயல்பினதாம். தொலைவிடத்திலுள்ள நண்பன் தனக்குக் கடிதம் எழுதல் வேண்டுமென்னும் முனைத்த நினைவோடும் ஒருவன் பலகாலும் விரும்பி வருகுவனாயின் அவன் நினைத்தபடியே கடிதம் வரக்காணாம்.

அஃதுண்மையாயின், ஒருவர் நினைத்தபடியெல்லாம் நடைபெறல் வேண்டும்; அவ்வாறு நடப்பக் காணாமையானும், ஒன்று நினைக்க மற்றொன்று முடிதலானும், நினையாத தொன்று வந்து எதிர்நிற்பதும் உண்டாகலானும் அஃதுண்மை யாவது யாங்ஙனமெனின்; நினைவு முனைத்து நின்றாலும் அது மேலும் மேலும் விருப்பத்தானும் அன்பானுங் காதலானும் உந்தப்பட்டு உரம்பெற்று நின்றாலல்லாமல், சினம், வருத்தங், கவலை, அச்சம், பொறாமை முதலாக மேலெடுத்து விளக்கிய இழிகுணங்களால் அது சிறிதும் பழுதுபடாமல் நின்றாலல்லாமல் தான் நினைத்த பயன்களைத் தான் நினைத்தபடியே தரமாட்டா தாகும். எரிவது விறகே யானாலும் அது மிகுந்த ஈரங்கலந்த வழி எரியுமோ? ஞாயிற்றினொளி எல்லையற்ற விளக்கமுடைய தாயினும் முழுதும் அடைப்பான ஓர் இருட்டறையினுட் புகுந்து விளங்குமோ? இங்ஙனமே நினைவின் வலிமையைக் குறைத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/266&oldid=1626074" இலிருந்து மீள்விக்கப்பட்டது