உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
234

❖ மறைமலையம் - 3 ❖

அதற்குப் பெருந் தடைகளாய்க் கிடக்கும் மாறுபட்ட குணங்களால் உள்ளம் பற்றப்பட்டிருக்குங் காறும் நினைந்தவை நினைந்தபடி நிறைவேறா. இனி, இம் மாறுபாடுகள் ஒழிய, நல்விருப்பமும் இனிய அன்பும் உண்மைப் பெருங்காதலுமாகிய உயர் குணங்கள் கிளர்ந்து விளங்குங்கால் நினைத்தவை நினைத்தபடியே நிறைவேறுமென்பது திண்ணம்.

அவ்வாறாயின்,விருப்பமும் அன்புங் காதலும் உயர்ந்தனவாய் நல்லனவாய்த் திகழல் எதனாலெனின்; தன்னோடு தொடர்புடையார்க்கு வரும் நன்மையை முன்வைத்துத் தனது நன்மையைப் பின்வைத்து உயர்ந்த நோக்கத்தோடும் உயர்ந்த எண்ணத்தோடும் ஒழுகுந் தன்மையினாலேயே அவையும் உயர்ந்து நல்லவாய் விளங்குகின்றன என்று கடைப்பிடித்தல் வேண்டும். இதனை ஓர் எடுத்துக் காட்டால் விளக்குவாம். தனக்கு ண்பராயினார் ஒருவர் வறுமையால் மிக நைந்து மனைவி மக்களோடு வாடுவதைக் கண்டு வருந்தும் நல்லோன் ஒருவன், அவர் வறுமை தீர உதவி செய்தற்குப் போதுமான பொருள் தன்கையில் இல்லாமையால், தனியே அமைதியாக ஓரிடத்திற் சென்றிருந்து 'என் நண்பர் வறுமை தீர்ந்து வாழல் வேண்டும்; அவர்க்கு நான் ஏராளமான உதவிகளைச் செய்யுமாறு எனக்கு மிகுந்த பொருள் கிடைக்க வேண்டும்' என்று விரும்பித் தனது நினைவை அடுத்தடுத்து முனைக்க நிறுத்தி வருகுவனாயின் அவன் நினைத்தவாறே சிலநாட்களில் அவனுக்கு மிகுந்த பொருள் வருதற்கான வழிகள்திறக்கும்; அவ்வழிகளில் அப்போது அவன் சிறிது முயல்குவனாயின் பெரும் பொருள் பெறுவன்; பெற்ற அப்பொருள் தன் நண்பர் வறுமை தீர்த்தற்கும் தனக்கும் பயன்படும். இவ்வாறு தன் நினைவை முனைக்க நிறுத்துதலே நல்விருப்பமும் உயர்ந்த அன்புமாகும்.

இவ்வாறன்றி ‘யான் ஒருவனுமே நன்கு வாழல் வேண்டும், எனக்கே எல்லாப் பொருளும் வேண்டும், பிறர் எங்ஙனங் கெட்டாலும் யான்வருந்தித் தேடிய பொருளில் எள்ளளவும் பிறர்க்கு ஈயேன்' என்னும் வன்நெஞ்சத்தோடு ஒருவன் எண்ணும் எண்ணம் ஈடேறாது; அவ்வெண்ணம் எல்லாராலும் அருவருக்கத் தக்கதேயாம்.ஆகவே, நினைக்கும் நினைவு உரம்பெற்று நினைந்த பயன்களைத் தருதற் பொருட்டு, அந்நினைவினை உந்தும் விருப்பம் தூயதாயும் தன்னோடு தொடர்புடையார் நலத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/267&oldid=1626075" இலிருந்து மீள்விக்கப்பட்டது