உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
237

முதலானவற்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவள் பலரைக் கேட்டுப் பார்த்தும் அஃதொன்றுமே புலப்பட்டிலது,படத்திற் கண்ட அவ்வாண் மகனையன்றி வேறெவரையும் அவள் மணக்க இசையாமை கண்டு, அவளுக்கு நெருங்கிய உறவினராய் உள்ளோர் 'படத்திற் கண்ட அவ்வாண்மகன் ஒருவன் உண்மையில் இருக்கின்றான் என்பதைத் தெரிதற்கு ஏதொரு வழியும் இல்லாதிருக்கையில், நீ இங்ஙனங் காதல் கொண்டு வருந்துதல் ஆகாது அதனை விட்டு உண்மையில் உயிர்வாழும் வேறோர் ஆண்மகனை மணக்க இசை என்று எவ்வளவோ சொல்லியும் அவள் மனந் திரும்பாமல், தான் கண்ட உருவத்தையே அல்லும் பகலுங் காதலித்து வந்தாள். இஃதிப்படியிருக்க, இவள் படத்திற் கண்ட உருவத்திற்கு உரியவனான ஆண்மகன் தென்னாப்பிரிக்காவில் உண்மையாகவே உயிரோடிருந்தான்.

அவனுக்கோ கனவின்கண் ஓர் அழகிய பெண்மகளின் உருவம் அடிக்கடி தோன்றியது. அவ்வுருவத்தையே அவனுங் காதலிப்பானானான். கனவிற் றோன்றும் அப்பெண்மணி யாராயிருக்கலாம் என்று கண்டறியத் தனக்கு நெருங்கிய உறவினரிலும் நண்பர்களிலும் அறிமுகமானவர்களிலும் தேடித்தேடிப் பார்த்தான்; அத்தகையாள் ஒருத்தியை அவன் அவர்களுள் எவரிடத்துங் காணவில்லை. அதன்பின் தொலைவான தேயங்களிலுள்ள பெண்மக்கள் பலப்பலரின் உருவப்படங்களை வரவழைத்துப் பார்த்தான்; அவைகளுள்ளும் அவள் உருவத்தைக் கண்டிலன். மிகவுஞ் சேய டங்களில் இருந்துவருவோர் பலரிடமுந் தான் கனவிற் கண்ட பண்ணின் அடையாளங்களைத் தெளிவாய் எடுத்துச் சால்லி அத்தகையளான ஒரு மடந்தையைக் கண்ட துண்டோவென இடைவிடாது உசாவி வந்தான்; அதுவும் பயன்படவில்லை. கடைசியாகத் தன் உருவப்படத்தைப் பல நாட்டுச் செய்தித்தாள்களிலும் பதிப்பித்து,அதன் கீழ்த் தன்பெயர் ஊர் இருப்பிடம் முதலியவற்றையுங் கண்டு, தான் கனவிற் கண்ட மாதின் உருவ அடையாளங்களையுங் குறிப்பிட்டு வந்தான்.

இவனது படமும் அதன்கீழ் எழுதப்பட்ட குறிப்புகளும் அமெரிக்காவில் உள்ள உள்ள ஒரு சிறந்த செய்தித் தாளிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/270&oldid=1626078" இலிருந்து மீள்விக்கப்பட்டது