உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
238

❖ மறைமலையம் - 3 ❖

பதிப்பிடப்பட்டு வெளியாயின. இவனைப்போலவே அமெரிக்கா நாட்டிற் காதல் கொண்டு வருந்தும் அப்பெண்ணின் உறவினருள் ஒருவர் அச்செய்தித் தாள் ஒன்றை அப்பெண்ணின் கையிற் காண்டுவந்து கொடுக்க, அதில் உள்ள அவ்வாண்மகனுருவம் தான் முன்படத்திற் கண்ட ஆண்மகனுருவத்தை ஒத்திருக்கவும், அவன் கனவிற் கண்ட பெண்ணின் உருவ அடையாளங்கள் தனதுருவ அடையாளங்களை ஒத்திருக்கவுங் கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தவளாய், உடனே ஒரு கடிதம் எழுதி அதனோடு தன் படத்தையும் வைத்துத் தென்னாப்பிரிக்காவில் உள்ள அத்துரைமகனுக்கு அனுப்பினாள். அவனும் அவள் படத்தைக் கண்டு அதிலுள்ள உருவமும் தான் கனவிற் கண்ட மடந்தையின் உருவமும் ஒத்திருக்கப் பார்த்து அளவுக்கடங்காக் களிப்புடைய னாய்ப் பின்னர்ச் சில நாளில் அவளை மணந்து கொண்டான். இருவரும் உயிரும் உடலும்போற் பூவும் மணமும்போற் காதலன்பிற் பிணைந்து இனிது வாழ்ந்தார்கள். உண்மையாக நடந்தேறிய இந்நிகழ்ச்சியை உற்றாராயுங்கால், உலகத்தின்கண் எல்லாவற்றினுஞ் சிறந்த காதலன்பால் உந்தப்பட்ட நினைவு அளவுக்கடங்கா வலிவுடையதாய்த் தான் நினைந்த பயனைத் தான் நினைந்தபடியே பயக்கவல்லதாதல் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் இனிது விளங்குகின்றதன்றோ?

இனி,உண்மைக் காதலன்பிற்கு அடுத்த நிலையில் வைத்தற்குரிய அன்பும் விருப்பமும் ஆவலும் அங்ஙனமே நினைவை வலிவேற்றுவனவாய் இருத்தலால், ஒன்றை நிறைவேற்றுதற் பொருட்டு முனைக்க நிறுத்தும் நினைவை இவ்வுள்ள நிகழ்ச்சிகளால் நிரம்பவும் உரப்படுத்தல் வேண்டும். ஒன்றனை ஆவலோடு செய்யுங்கால் அது செய்வோனுக்கு இன்பத்தைத் தருதலுடன், அவன் செய்யும் அலுவலையும் செவ்வையாய் எளிதில் இனிது முடிப்பிற்கும். தான் எடுத்த ஒரு செயலை ஆவலோடு செய்யாதவனுக்கு அது பெருந்துன்பத்தை விளைப்பதும் அவன் செய்யும் அலுவலைப் பழுதுபடுத்துவதும் எங்கும் எளிதிற் காணலாம். வந்த விருந்தினர்க்கு உணவு சமைத்து இடும் வீட்டார் இருவரில், ஒருவர் அகமும் முகமும் மலர்ந்து ஆவலோடும் விருந்துசெய்ய,மற்றவர் வெறுங் கடமைக்காக அன்பின்றிச் செய்ய, இங்ஙனம் இருதிறமாய் அமைந்த அவ்விருந்து உணவை அருந்துவோர் ஒன்றிலுள்ள ஒன்றிலுள்ள மேன்மையையும் மற்றொன்றிலுள்ள தாழ்மையையும் நன்கு உணரப்பெறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/271&oldid=1626079" இலிருந்து மீள்விக்கப்பட்டது