உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
239

இன்னுங், கல்விகற்குஞ் சிறார் இருவரில் ஒருவன் தான் உணர வேண்டிய நூல்களை அக்கரையோடு பயில, மற்றவன் ஆசிரியனிடத்துள்ள அச்சத்தானும் தாய் தந்தையர் ஓவாது செய்யுந் தூண்டுதலானும் தன் பாடங்களை வேண்டா வெறுப்பாய்ப் பயில, இவ்வாறு நடைபெறும் இருவகைப் பயிற்சியின் இயல்புகளையும் உற்று நோக்குவேமாயின் முன்னையது பெரும்பயன் தருவதாயும் பின்னையது சிறுபயனுந் தராததாயும் இருப்பதை எளிதிற் கண்டறியலாம். ஆதலால், நினைவை முனைக்க நிறுத்தி அதனை உரமேற்றுதற்கு அதனை ஆவல் அன்பு முதலியவற்றோடு செய்தல் இன்றியமையாததாகும் என்க.

இனி,இங்ஙனமெல்லாம் அறிவை முனைக்க நிறுத்தும் வகை தெரிந்தாலன்றித் தன்னை மேன்மைப்படுத்தவும்,பிறரை அவரது நன்மையின்பொருட்டு அடக்கியாளவும் எவனாலும் சிறிதும் ஏலாது. அறிவை முனைக்க நிறுத்தத் தெரியாதவர் மக்களினுந் தாழ்ந்த விலங்கினங்களைப் போற்காலங்கழிக்க நேரும். விலங்குகளுங்கூடத் தமக்குப் பசியெழுந்த நேரங்களில் தமதறிவை முனைக்க நிறுத்தித் தாம் வேண்டிய இரையைப் பெறுகின்றன. சுவரிலிருக்கும் பல்லியின் செயலைச் சிறிது உற்றுப்பாருங்கள்; தனக்கு இரைவேண்டித் தேடித் திரிவதும், இரையாதற்குரிய ஒரு பூச்சியைத் தொலைவிற் கண்ட அளவிலே தன் ஐம்புலன்களையும் ஒடுக்கிக்கொண்டு நினைவைக் கண்ணிலே முனைக்க நிறுத்தி,எவ்வளவு அமைதியாகவும் உன்னிப்போடும் மெல்ல மெல்ல நகர்ந்து சென்று,அதனைப் பிடித்தற்குரிய தொலைவில் வந்தவுடன் நெடுநேரம் அசையாமலிருந்து,பிறகு குறிதவறாமல் ஒரே பாய்ச்சலாய்ப் பாய்ந்து அதனைத் தன் வாயிற் கெளவிக் கொள்கின்றது! அவ்விரையைப் பிடிக்கும் மட்டும் அப்பல்லியினிடத்துக் காணப்படும் ஒடுக்கமும் உன்னிப்பும் நினைவுமுனைப்பும் அமைதியும் என்னும் அரியசெயல்களில் ஆயிரத்தில் ஒரு கூறேனும் நம் மக்களிடத்தில் உண்டாகுமாயின் அவர்கள் எவ்வளவோ மேலான நிலைமையை அடைவார்கள்!

உணவின் பொருட்டுத் தாம் செய்யும் முயற்சிகளிலேனும் அவர்கள் கருத்து ஒன்றுபட்டு நிற்கின்றார்களாவென்று ஆராய்ந்து பார்த்தால் அவற்றை அவர்கள் மூக்கால் அழுதுகொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/272&oldid=1626080" இலிருந்து மீள்விக்கப்பட்டது