உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
240

❖ மறைமலையம் - 3 ❖

வேண்டா வெறுப்பாய்ச் செய்யக் காண்கின்றோம்! மக்களினும் மிகவுந் தாழ்ந்தனவாகக் கருதப்படும் பல்லி முதலான சிற்றுயிர் களிற் காணப்படும் நினைவொருமைதாகும் மக்களிடத்திற் காணப்படுவது அரிதாயிற் பின்னை இவர்கள் தம்மை அவற்றினும் உயர்ந்தவராக எண்ணி இறுமாந்திருத்தல் எவ்வளவு பேதைமையாகத் தோன்றுகின்றது! பசியெடுத்த வேளைகளிற் செய்யும் முயற்சியிற் கருத்தை நிறுத்துதலன்றி, வேறுபல நன்முயற்சிகளைச் செய்யவேனும் அவற்றிற் கருத்தை நிறுத்தவேனும் அறியாத விலங்கினங்களைக் காட்டினும் மக்கள் உயர்ந்தவராகல் வேண்டின், அவ்வுயர்வு பல நன்முயற்சிகளிற் கருத்தை முனைக்க நிறுத்தி ஆவலோடு அவற்றைச்செய்யும் வழியாலல்லலாமல் வேறெவ்வழியாலும் பெறுதல் இயலாது. மற்று எத்தகைய முயற்சி செய்தாலும் அதன்கண் நினைவை முனைக்க நிறுத்தி அதனை ஆவலோடு செய்யக் கற்றுக் காண்டவன் கல்வியில் வல்லவனாகலாம், கைத்தொழிலிற் றிறமைமிகலாம், அரசியலில் முதன்மைபெறலாம், அரும் பெருஞ் செல்வத்தை அடையலாம், அடையலாம், நோயின்றி உயிர்வாழலாம், நூறாண்டு உயிர் பிழைக்கலாம், இன்னுந் தனக்குந் தன்னைச் சார்ந்தார்க்கும் எவ்வளவோ நன்மைகளையெல்லாம் வருவித்துக்கொள்ளலாம்.

இன்னுங் கருத்தை முனைக்க நிறுத்தப் பழகினவர்கட்கு, அவர்தம் நினைவின் நன்மைக்கு ஏற்ப அவர் தம் உடம்பும் உடம்பிலுள்ள உறுப்புகளும் சீர்திருத்தம் அடைந்து பொலிவுடன் விளங்குமாதலால், எங்கே சென்றாலும் அவர்கட்குச் சீருஞ் சிறப்பும் உண்டாம். அவரைக் கண்டவளவே எத்தகையினரும் அவர்பால் வணக்கவொடுக்க முடையராய் அன்புடன் ஒழுகுவர்; அவர் நினைத்த படியெல்லாஞ் செய்குவர். நினைவின் வல்லமை வாய்ந்தோர்க்கு அவர் தம் உடம்பும் உடம்பினுறுப்புகளும் பொலிவு பெற்றிருத்தலையும், அவர் நினைந்தபடியும் சொல்லுகிறபடியும் எல்லாம் நடைபெறுதலையும் நாம் சிறிது ஆராய்ந்து பார்த்தாலும் செவ்வனே தெரிந்து கொள்ளலாம். உள்ளத்திலே மகிழ்ச்சி தோன்றுங்கால், அது தோன்றப் பெற்றவர் முகமும் உடம்பும் எவ்வளவு கிளர்ச்சி யுடையவாகின்றன! அங்ஙன மல்லாமல் ஒரு கொடுந்துயரம் உண்டாகுங்கால் அவரது முகம் எவ்வளவு வாடி உடம்பு மெலிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/273&oldid=1626082" இலிருந்து மீள்விக்கப்பட்டது