உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
251

பிடரிக்கு மேற் றலையினடியை உற்றுநோக்கும் நோக்கமும் அவ்வுயிரைச் சென்றுபற்றும். இவ்வுண்மையைப் பின்வருமாறு ஆராய்ந்து கண்டுகொள்க. ஓர் அவைக்களத்திலேனும், அல்லதொரு திருவிழாக் கூட்டத்திலேனும் தமக்குமுன்னே முதுகு திரும்பியிருக்கும் பலரில் ஒருவரைக் குறிப்பிட்டுக் கொண்டு அவரது பின்றலையின் அடியைச் சிறிதுநேரம் உற்றுநோக்கி, அங்ஙனம் நோக்குகையில் அவர் தம்மைத் திரும்பிப் பார்க்கக் கடவரென்று முனைப்புடன் நினைக்க அவ்வாறு நினைத்த சில நொடிப்பொழுதிலெல்லாம் அவர் தம்மை அறியாமலே உடன்திரும்பிப் பார்ப்பர். இது கொண்டு உயிரின் இருப்பிடம் பின்றலையின் அடிப்புறத்தும் உண்டென்பது தெளியப்படும். அங்ஙனமாயினும்,அதன் அறிவு முன்நின்று விளங்கும் வாயில்கள் முகத்தின் கண்ணே அமைக்கப் படிருத்தலால் பின்றலையின்அடியை உற்று நோக்கி அதனை அறிவிக்க லுற்றாலும் அது திரும்பி முகத்தின் வழியாகவே ஏதும் செய்யக் கூடியதாகும். இதனாலன்றோ பின்றலைப்புறத்தை நோக்கியதற்கு அங்கிருந்தே அஃது ஏதும் செய்யமாட்டாமல் முகத்தைத் திருப்பிப் பார்க்கின்றது.

இன்னும் ஒருவரை யோகநித்திரை என்னும் அறிதுயிலிற் பழக்கவேண்டுகிற மற்றொருவர்,அவர்க்கு அஃது எளிதில் வருமா என்பதை ஆராய்ந்து பார்க்கும் பொருட்டு,அவர்தம் பின்றலைப்புறத்தே தம் கைகளை மெல்லவைத்துச் சிறிதுநேரம் அவ்விடத்தை உற்றுநோக்கியபடியாயிருந்து, பின் “யான் இக்கைகளை நும் தலையினின்றும் இப்புறம் எடுக்கையில் என் கைகளோடுகூடவே நுமது தலை பின்வர, நீரும் பின்சாய்வீர்” என்று இரண்டு மூன்றுமுறை சொல்லிப், பிறகு மெல்லத் தம் கைகளை இப்புறம் எடுக்கையில், அவர்தலை பின்சாய்ந்து அம்மற்றவர் கைகளோடு வர அவருடம்பும் பின்சாய்வதைப் பார்க்கலாம்.

இவ்வாறெல்லாம் ஒருவருயிர் அவருடம்பில் முனைத்து நிற்கும் இடங்களை அறிந்து, அவ்விடங்களை உற்றுப்பார்க்கும் முகத்தால் அவரது உயிரோடு ஒன்றுபட்டு அவரைத் தம் நினைவின்வழி நிறுத்தக் கற்றுக்கொண்டவர், பின்னர் அவருடம்பின் எந்த இடத்தையும் எந்த உறுப்பையும் உற்றுநோக்கி அங்கே உள்ளே ஒருநோயை நீக்கவும் அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/284&oldid=1626094" இலிருந்து மீள்விக்கப்பட்டது