உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
252

❖ மறைமலையம் - 3 ❖

அங்கில்லாத தொருநோயை வருவிக்கவும் செய்யலாம். யாங்ஙனமெனிற் காட்டுவாம்; ஒருவர்க்குக்கையில் ஒருநரம்பு வலியிருந்தால், அதனை நீக்குதற்குப் புகுந்தவர் முதலில் அவர்தம் கண்களை உற்றுநோக்கி அவரது உயிர் தம் நினைவின் வழிப்படுகவென்று உறுத்துநினைந்து, அதன்பின் நோயுள்ள அவ்விடத்தை உற்றுநோக்கி 'இவ்விடத்தில் உமக்கு நோய் சிறிதும் இல்லை. இவ்விடம் மிகவும் செம்மையாய் இருக்கின்றது' என்று சொல்லி அவ்விடத்தைத் தமது கையாற்றடவவே அங்குள்ள நோய் விலகிப்போகும் இனி, அவரை முன்போலவே கண்ணிலாயினும், புருவங்களின் நடுவிலாயினும் உற்று நோக்கியபின், அவர்தம் கையின்புறத்தே ஒரு செப்புச்சல்லியை வைத்து ‘இது நெருப்பிலிட்டு நன்றாய்ப் பழுக்கக் காய்ச்சிய காசு; இஃது இந்த இடத்திற்பட்டு நும்கையின் இந்த இடத்தை நன்றாய்த் தீய்த்துவிடும்' என்று சொல்லியவுடனே அது நெருப்பில் பழுக்கக் காயாத வெறுஞ் சல்லியாயிருந்தும், அவர் கையின் அவ்விடத்தைத் தீய்த்துக் காயமாக்கக் காணலாம். இவ்வாராய்ச்சிகளை நாமே நம்மாணாக்கர் சிலரிடத்துச் செய்து பார்த்திருக்கின்றேம். இக்கல்வியில் தேர்ந்த நம் நண்பர் சிலரும் மற்றையர் சிலர்மேல் இங்ஙனம் செய்து காட்டியதனை நாம் நேரிலிருந்து கண்டிருக்கின்றேம்

ஒருகால் நம் மாணவர் ஒருவர் இதன் உண்மையைத் தாம் தெரிந்துகொள்ளும் பொருட்டு நம்மிடம் வந்தனர். அவரை எமக்கு நேரே நிறுத்தி அவர் கண்களை இமையாமற் சிறிதுநேரம் உற்றுநோக்கியபின் அவரது இடது கையைப் பிடித்துத் திருப்பி அவரது புறங்கையின் ஓரிடத்தைத் தொட்டு 'இந்த இடத்தில் உனக்கு இரத்த ஓட்டம் இல்லை, இங்கே ஓர் ஊசியை ஏற்றுவேன், உனக்கு நோய் உண்டாகாது, வலியிராது' என்று சொல்லிக் கொண்டே அவ்விடத்தைத் தொட்டுத் தடவிப் பிறகு ஒரு குண்டூசியை அவ்விடத்தில் குத்திச் செருகிவிட்டேம். யாம் சொல்லியபடியே அவர்க்கு அங்கே சிறிதும்நோய் உண்டாக வில்லை. அங்கே அவ்வூசி தமது தசையில் நுழைக்கப்பட்டதைப் பார்த்தும் அது நுழைக்கப்படாதனவைபோலவே யிருந்தார். அதன்பிற் சிறிதுநேரஞ் சென்று அவ்வூசியைப் பிடுங்கிவிட்டு அங்கு ஏதொருநோயும் தழும்பும் இரா என்றேன். யாம் சொல்லியபடியே அவர்க்குஅங்கே நோயும் இல்லை தழும்பும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/285&oldid=1626095" இலிருந்து மீள்விக்கப்பட்டது