உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
302

❖ மறைமலையம் - 3 ❖

அவர் அதனை உணரார்; துயிற்றுவோர் குரலொலியைத் தவிரப் பிறிதொன்றும் அவருக்குக் கேளாது. இவ்வடையாளங்களைக் கண்டவுடன், துயிற்றுவோர் பின்வருமாறு அவருக்குச் சொல்லுக: 'இப்போது - நீர் - நிரம்ப ஆழ்ந்த துயிலில் இருப்பினும் - யான் சொல்வனவற்றை மட்டும் - என் கட்டளைப்படி கேட்கின்றீர்' என்றபின் ‘என் சொற்களைக் கேட்கின்றீரா?' என்று வினவுக. முதலிற் சிறிது சும்மா இருப்பர்; பின்னும் பின்னும் விடாமற் கேட்டால் அவர் ‘ஆம், இப்போது கேட்கின்றேன்' என்று தூக்க மயக்கத்தால் மெல்ல மெல்லச் சொல்வர். பிறகு 'உமது ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபடியே கண்களைத் திறந்துபாரும் என்றுஇரண்டு மூன்றுமுறை சொல்லுக. அங்ஙனமே அவர் கண்களைச் சிறிது உழைப்போடு அரைவாசி திறந்து பார்ப்பர். அப்போது அவர்தம் கண்கள் சிவந்திருக்கும். இதனால், அவர் ஆழ்ந்த துயிலிலேதான் இருக்கின்றார் என்பதனைத் திண்ணமாகத் தெரிந்து கொள்ளலாம்.

நினைவற்ற இத்துயிலில் இருப்போர்க்கு ஐம்பொறி யுணர்வுகளும் தம் இயற்கைக்கு மாறுபட்டு நடக்குமாறும் செய்யலாம். யாங்ஙனமெனின், ஒரு தாம்புக் கயிற்றைக் கையிற்கொடுத்து 'இது மெல்லிய ஒரு பூமாலை, இதனை நீர் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்' என்று சொன்னால், அவர் அதனைத் தடவிப் பார்த்துப் புன்சிரிப்போடு அதனைக் கழுத்தில் அணிந்துகொண்டு இருப்பர். பிறகு 'நீர் இப்போது கழுத்தில் அணிந்திருக்கும் இந்த மாலையில் தொடுக்கப் பட்டுள்ள முல்லைமலர்கள் எவ்வளவு நறுமணம் உள்ளன வாயிருக்கின்றன! நீர் இந்த மாலையை முகந்து பாரும் அதன் மணம் உமக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும்’, என்று சொன்னவுடன், அவர் தமது கழுத்திற் பூண்டிருக்கும் அந்தத் தாம்புக்கயிற்றைப் பிடித்துத் தூக்கி முகந்து பார்த்துப் புன்சிரிப்புக்கொண்டு மகிழ்வர். 'அதன் மணம் எப்படி யிருக்கிறது?' என்று வினவினால் ‘மிகவும் நன்றாயிருக்கிறது!' என்று சொல்லிச் சொல்லி அதனை முகந்து முகந்து பார்ப்பர். அதன்பிற் சிறிது கற்கண்டை அவர் கையிற் கொடுத்து 'இவை கசப்பான பாகற்காய்விதை, இவற்றை நாவில் இட்டுச் சுவைத்துப் பாரும்.' என்று சொன்னால், அவர் அவற்றை வாயினுட்பெய்து சுவைத்து இவை கசக்கின்றன என்று முகஞ்சுளித்துச் சொல்லி அவற்றைக் கீழே உமிழ்வர். பின்பு, சில

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/335&oldid=1626198" இலிருந்து மீள்விக்கப்பட்டது