உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
304

❖ மறைமலையம் - 3 ❖

அதன்மேல், அவரை இருக்கையினின்றும் எழச்செய்து 'இப்போது இதிற்சென்று நீராடும்' என்றுவிட, அவருள்ளபடியே நீரில் இறங்கித் தலைமுழுகுவதுபோற் செய்வர். அதன்பிறகு ப்போது நீர் ஈரந் துவர்த்திக்கொண்டு இந்தப் பூங்காவிலிருந்து ளைப்பாறும்’ என்று கூற,உடனே அவர் அங்ஙனமே செய்வர். பின்னர் 'இந்தப் பூங்காவில் உமக்கெதிரே ஓர் இளமாமரம் ஆ! எவ்வளவு அழகாய்ச் செழித்திருக்கின்றது! பார்த்தீரா?' என்று கேட்பின் ‘ஆம், இந்த இளமாமரம் மிகவுஞ் செழுமையாகத்தான் இருக்கின்றது!' என்று விடை கூறுவர். உடனே 'இப்போது அம் மாமரத்திலிருந்து ஒரு குயில் எவ்வளவு இனிதாகக் கூவுகின்றது! அதனை உற்றுக் கேளும்!’ என்று சொல்லுக. அவர் அக்குயிலோசையைக் கேட்பார்போல் காது கொடுத்து உற்றுக் கேட்பர். அப்போது 'இக் குயிலோசை எப்படி இருக்கின்றது?’ என்று வினவுக. அதற்கவர் 'ஓ! இந்தக் குயிலிசையின் இனிமையை என்னென்று சொல்லுவேன்! இஃது எனக்கு அளவிறந்த மகிழ்ச்சியைத் தருகின்றது!' என்று விடையளிப்பர்.

'அப்படியானால் நீரும் உமக்குத் தெரிந்த ஓர் இனிய பாட்டைப் பாடுகிறதுதானே. அவ்வாறு பாடினால் அஃது உமக்கு இன்னும் மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். ஏதோ சிறிது பாடும்' என்று சொல்லி அவரைத் தொட்டு அசைத்து விட்டால், உடனே அவர் தமக்குத் தெரிந்த தொரு பாட்டைப் பாடாநிற்பர். சிறிதுநேரம் பாடியபின் ‘பாட்டு மிக நன்றாயிருக்கின்றது. போதும்,' என்று சொல்லி நிறுத்திவிடுக. இன்னும் இவை போன்ற எத்தனையோ வகையான உருவெளித் தோற்றங்களை யெல்லாம் அவர்பால் விளைவிக்கலாம். இங்ஙனமெல்லாஞ் செய்து பார்த்தபின், இரண்டு உள்ளங்கைகளையும் மேன்முகமாக விரித்து நீட்டி, அவரைத் தொட்டோ தொடாமலோ முழங்காலிலிருந்து, தலைவரையில் மேல்நோக்கித் தடவி ‘நீர் இப்போது விழித்துக் கொள்ளுகிறீர்; கண்ணைத் திறந்து விழித்துக் கொள்ளும்' என்று சொல்லும்போதே கைகளைத் தட்டி அவரை எழுப்பிவிடுக.

இனி, ஒன்றைவிட்டொருநாளோ, கிழமைக் கொரு காலோ, அன்றித் திங்களுக்கொருகாலோ அடுத்தடுத்து வரும் நாட்பட்ட நோய் உடையார்க்கு, நினைவற்ற இத்துயிலை வருவித்து, அந்நோய் வருதற்குரிய காலமுறையை மாற்றி விட்டால் அந்நோய் நீங்கிவிடுதல் திண்ணம். எண்ணத்தையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/337&oldid=1626200" இலிருந்து மீள்விக்கப்பட்டது