உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4

❖ மறைமலையம் - 3 ❖

இறைவன் பேருதவியை நினையாமலும், தம் முற்பிறவிகளை உய்த்துணராமலும், இந்நிலவுலகின் சிறு வாழ்வையே நிலையாக மதித்துப் பழி பாவங்களை மிகவும் தொகுத்து, மேல் வரும் பிறவிகளைப் பாழாக்குகின்றன. இறைவன் தந்தருளிய இவ்வரிய மக்கட்பிறவியை இங்ஙனம் வறிதாக்குவதன் காரணம் என்னென்று நோக்கியவழி, அவை தாம் இறந்தபின் அடையும் நிலையை ஆராய்ந்து பாராமையே யென்பது நன்கு விளங்கிற்று. உயிர்கள் மறுமையில் எய்தும் நிலைகளைப் பற்றிக் கூறும் நூல்கள் சிற்சில உளவேனும், அவற்றில், எடுத்துக்காட்டப்பட்ட கதைகள் உண்மையுடையனவென்பது புலப்படாமையால், அந்நூற்பொருள் நம்பத்தக்கவைகளாக நமக்குத் தோன்றவில்லை. அவற்றைத் தவிர மறுமை நிலையை உள்ளவாறு விரித்துக்கூறும் வேறு நூல் ஒன்றேனும் தமிழில் இல்லாமையால், இதனை இயற்றலானேம்.

இதன்கண் எடுத்துக் காட்டப்பட்ட வரலாறுகளிற் பெரும்பாலன உண்மையாகவே நிகழ்ந்தவையாகும். ஆதலால் மறுமை நிலையை ஒருவாறாயினும் உண்மையான் உணர்ந்து பயன்பெற வேண்டுவார்க்கு இந்நூல் பெரிதும் பயன்படும் என்னும் நம்பிக்கையுடையேம்.

மறைமலையடிகள்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/37&oldid=1624426" இலிருந்து மீள்விக்கப்பட்டது