உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15



1. இம்மை மறுமை

‘மரணம்’ என்னுஞ் சொல்லைக் கேட்டவுடனே மனிதர் பலரும் திடுக்கிடுகின்றார்கள். அதற்குக் காரணம் யாது? இந்த உலகத்தில் தாம் மிகவும் வருந்தித் தேடிய பொன்னையும், பொருளையும் விட்டுப் பிரிய மனம் இல்லாமற் பலர் வருந்துகின்றனர்; வேறு பலர் தம் அன்பிற் சிறந்த அழகிய மனையாளைப் பிரிய மனம் இன்றி வருந்துகின்றனர்; மற்றும் பலர் தாய்தந்தையர், உறவினர், நண்பர் முதலியோரைப் பிரிய மாட்டாமல் வருந்துகின்றனர்; இன்னும் பலர் பிள்ளைகளையும், உடன்பிறந்தாரையும் விட்டுப் போகக்கூடாமல் வருந்து கின்றனர். இவர்கள் இப்படியிருக்க, வேறு சிலர் சிலர் முரட்டு சுபாவ முடையவர்களாய் வெட்டுக்கும், குத்துக்கும், கொலைக்கும் துணிந்து மரணம் அடைவதற்கு அஞ்சாதவர்களாய் எந்த நேரத்திலாயினும் தம் உயிரை மாய்த்தற்குச் சித்தமாயிருக்கின்றார்கள். இன்னும் ஒரு வகையார் ‘கண்டதே காட்சி கொண்டதே கோலம்’ என்று நினைத்து தாம் உண்ணுவதும், உறங்குவதும் சுகித்திருப்பதுந் தவிர வேறு ஒன்றையும் எண்ணாதவர்களாய்க், கடவுளும் இல்லை, ஆத்மாவும் இல்லை, முற்பிறப்பும் இல்லை, பிற்பிறப்பும் இல்லை, புண்ணியமும் இல்லை, பாவமும் இல்லை, எந்த வழியிலாயினும் திரவியத்தைச் சம்பாதித்துச் சுகமாய் வாழ்வதே சுவர்க்கம், அஃது இல்லாமல் வறுமைப்படுவதே நரகம், நான்கு பூதங்களால் ஆன இந்த உடம்பு அழிந்தால் அதனோடு உயிரும் அழிந்துபோகும் என்று சொல்லி மறுமையைப் பற்றிச் சிறிதாயினும் சிந்தியாமல் மிருகங்கள், பறவைகளைப் போற் காலங் கழித்துவருகிறார்கள். இப்படிச் சொல்லிய இந்த மூன்று திறத்தாரும் இந்தச் சரீரம் அழிந்த பின் ஆத்மாவானது அடையும் நிலைமையினைச் சிறிதேனும் பிரயாசை யெடுத்துக்கொண்டு விசாரணை செய்வார்களானால் அவர்கள் மேற்சொல்லியவிதமாகக் காலங்கழிக்க இடம் இராது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/48&oldid=1626081" இலிருந்து மீள்விக்கப்பட்டது