58
8. ஆவிவடிவங்கள் தோன்றுதலின் காரணம்
இறந்து போனவர்களின் ஞானநிலை அன்புநிலையும் அவர்களுக்கு உறவினராய் உயிரோடிருப்பவர்களின் ஞான நிலை அன்புநிலையுமே ஆவேசங்கள் தோன்றுதற்கும் தோன்றாததற்குங் காரணமாகும். இதனைச் சிறிது விரித்துக் கூறுகின்றோம். உயிரோடிருக்குங் காலத்து இரண்டு பெயர் ஏதோ உலகவொழுக்கத்திற்காக ஒருவரோடொருவர் சேர்ந்திருந்தார்களே யல்லாமல் அவர்கள் தம்முள் அன்பு பாராட்டியது இல்லையானால், அவ்விருவரில் ஒருவர் இறந்தபிறகு அவர்கட்குள் எவ்வகையான சம்பந்தமும் இல்லாமற் போகின்றது. மேலும், உயிரோடிருந்த காலத்துத் தமது அறிவைப் பெருகச் செய்யாமல் நிலையற்ற உலகக் காரியங்களிலேயே அழுந்தி அறியாமை வயப்பட்டு இருந்தவர்கள் இறந்து சூக்கும சரீரத்திற்குப் போனால், அங்கும் அறிவில்லாமல் இருளில் அழுந்திக் கிடப்பார்கள். அப்படி அறிவில்லாமற் கிடப்பவர்கள் இவ் வுலகத்திலுள்ளாரை அறிந்துவந்து இவர்களுடன் உறவாடல் முடியாது. அதுவேயுமன்றி, இங்கு உயிரோடிருப்பவர்கள் நல்லறிவுடையராயும் நல்ல அன்புடையராயுமிருந்தால், அறிவோடும் அன்போடும் இறந்துபோன தம்மவர்களை அழைத்து உரையாடலாம். இங்குள்ளவர்கள் மறுமையொன்று இருக்கிறதென்றும், அம்மறுமையுலகத்தில் அளவிறந்த ஆன்மாக்கள் இருக்கிறார்களென்றும், அவர்களை வருந்தி அன்போடு அழைப்பின் அவர்கள் நம்முடன் வந்து உறவு கலப்பார்களென்றும் சிறிதாயினும் நினையாமலும்., யாராவது அறிவுடையோர் சொன்னாலும் அவர்கள் சொல்லை மதியாமல் அவ நம்பிக்கையுற்றும் பொன்னே பொருளென்று உலகச் சேற்றிற் கிடந்து புரள்கின்றார்களாகலின், அவர்களிடத்தில் சூக்கும சரீரவாசிகள் எப்படி வந்து கலக்கத் துணிவார்கள்? இம்