உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 3.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
59

மண்ணுலகத்தில் ஒருவருக்கொருவர் உபகாரிகளாய் வாழ்ந்து வரும் நம்மனோரில் எவர் ஒருவரை மதியாமல் அலட்சியஞ் செய்கிறாரோ அவரை மற்றவரும் மதியாமல் அலட்சியஞ் செய்கிறாரன்றோ? எம்மையொருவர் மதியாவிட்டால் யாமும் அவரை மதிப்பது இல்லையன்றோ? நிலவுலக வாசிகளாகிய நம்மிடம் ஏதோருபகாரத்தையும் எதிர்பாராத சூக்குமவாசிகளான ஆன்மாக்கள் தம்மை எவரேனும் விரும்பி வருந்தி யழைத்தாலல்லாமல் அவர்கள் இங்குள்ள நம்மனோரிடம் வந்து உரையாடவே மாட்டார்கள். மேலும், இவ்வுலகத்தில் உயிரோடிருந்த நாட்களில் கண்டது மெய் காணாதது பொய் சாமியை யார் கண்டார்? பூதத்தை யார் கண்டார்? உயிர் என்று கூட ஒரு பொருள் இருக்கிறதா? இந்த உடம்புதான் உயிர்; நன்றாக உண்டு உடுத்துப் பொருளைத் தேடி இன்புற வாழ்வதுதான் வாழ்க்கை என்று இவ்வாறெல்லாம் சொல்லிக் காலங்கழித்தவர்கள் இவ்வுடம்பை விட்டுப் பிரிந்து சூக்கும சரீரத்தோடும் மேல் உலகங்களுக்குப் போனால், அங்கேயுள்ள தோற்றங்களையும் காட்சிகளையுங் கண்டு அங்கும் அவற்றை நம்பாமல் தாம் ஏதோ கனவு காண்பதாக எண்ணி ஒன்றுந் தோன்றாமல் மயங்கிக் கிடக்கின்றார்கள். இப்படிக்கிடப்பவர்கள் பலராகையால், இவர்களை இங்குள்ளவர்கள் நினைத்து அழைத்தாலும் இவர்கள் அதனைத் தெரிந்து வந்து உரை யாடுவது அரிதினும் அரிதாம். இதற்கு மெய்யாக நடந்த ஒரு கதையினை இங்கே உதாரணமாக எடுத்துக் காட்டுகின்றாம்:

பௌதிக சாத்திர ஆராய்ச்சியில் மிகவுந் தேர்ந்தவரான ஒரு பண்டிதரிருந்தார். அவர் இவ்வுலக அமைப்புகளையும் ஐம்பூதங்களின் இயல்புகளையும் மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து அறிந்தவராயினும், இவ்வைம்பூதங்களின் வேறாக ஆன்மா ஒன்று இருக்கிறதென்றேனும், கடவுள் ஒன்று உள்ளதென்றேனும், மறுமை யொன்றிருக்கிற தென்றேனும் நம்பினதில்லை. பிறகு அவர் மரணக்காலம் வந்து இறந்து போனார். பௌதிக சாத்திர உணர்ச்சியினால் அவர் அறிவு தெளிவடைந்து இருந்தமையால் சூக்குமசரீரத்தோடும் மேலுலகத்திற்குப் போனவுடனே அங்குள்ள காட்சிகளையும் தோற்றங்களையும் கண்டு, தாம் முன்னிருந்த நிலவுலகத்திற்கு அவை முற்றும் மாறுபட்டுத் தோன்றவே அவற்றைச் சிறிதும் நம்பாமலும், தாம் இறந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/92&oldid=1628614" இலிருந்து மீள்விக்கப்பட்டது