உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்

33

வேறு மணமகன் கிடைத்திலனாயின், அவன் தன் சாதியைவிட்டு வேறு சாதியிற் கலக்கலாகாமையின், அக்கல்லாக் கயவனையே கணவனாய்க் கொள்ளல் வேண்டும்! ஆ! பொருளற்ற இச் சாதிவேற்றுமைக் கொடுமையால் நம் அருமைப் பெண்மணிகள் படுந்துயர் மலையினும் பெரிதோ! அன்றிக் கடலினும் பெரிதோ! அன்றி ஞாலத்தினும் பெரிதோ! இவ்வளவுதான் என்று கூறல் எம் ஒரு நாவால் இயலாது!

பல நலங்களாற் சிறந்த ஓர் ஆண்மகனும் அங்ஙனமே தன் சாதியை விட்டுப் பிற சாதியிற் கலத்தல் ஆகாமையால் நலஞ் சிறிதுமில்லா ஒரு போதைப் பெண்ணை மணந்து துன்புற வேண்டியவனா யிருந்தாலும், அவனது நிலை ஒருசிறந்த பெண்ணின் துன்ப நிலைபோல் அத்துணைக் கொடிதன்று.

ஏனென்றால், அவன் தான் வேண்டியபடி வேறு மகளிரைக் கூடிக்களித்தாலும், அவனை மிகுதியாய்க் குற்றஞ் சால்வார் இல்லை. ஆனால், நம் அருமைப் பெண்மக்களின் நிலையோ அத்தகைய தன்றே! அவர்கள் யாரைப்பார்த்தாலுங் குற்றம், யாரொடு பேசினாலும் அதனிலுங் குற்றம், அப்புறஞ்சொல்ல வேண்டுவது யாதுளது? விலங்குகளும் பறவைகளுங் கூடத் தாந் தாம் விரும்பிய துணையையே கூடி இனிது வாழாநிற்க, ஆறறிவுடைய மக்கட் பிறவியிற் பிறந்து அறிவையும் அழகையும் நற்குணத்தையுங் கண்டு பாராட்டிக் காதலன்பு கொள்ளத்தக்க ஆண் பெண் மக்கள் மட்டும் இடையே புகுத்த சாதிவேற்றுமை யென்னுங் கொலைஞனால் வெட்டியழிக்கப்பட்டுக் காதலன்பு என்னும் உயிர் ஓடிப்போன பின், இழிந்த காமப்பிண வாழ்க்கையிற் காலங்கழிக்கும்படி கட்டாயப் படுத்தப்பட்டால், இதனினும் வேறு கொடுங் கொலை உளதோ! கூறுமின்கள் அறிஞர்களே! உலகிய லொழுக்கத்திற்கு அடிப்படையாய் நிற்குங் காதலன்பைக் கீழறுத்துவிட்டால், அதன் மேல் நிற்கும் அவ்வுலகியல் வாழ்க்கை கீழ் விழுந்து நுறுங்கா தொழியுமோ! இங்ஙனம் மக்கள் வாழ்க்கையை வேரிலேயே அறுத்துக் கொலை புரிவோர், அருளொழுக்கத்தையும் அன்பொழுக்கத்தையுமே வலியுறுத்தும் நம் தெய்வ ஆசிரியரால் வகுக்கப்பட்ட நம் சைவ சமயத்திற்கு உரியராவரோ! சொன்மின்கள் அன்பர்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/66&oldid=1592042" இலிருந்து மீள்விக்கப்பட்டது