உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

23. திருக்கோயிற் றெய்வங்கள்

னிப், பின்றைக் காலங்களில் அமைக்கப்பட்ட சிவபிரான் றிருக்கோயில்களின் கருவறையிற் சிவலிங்கம் ஒன்றுமட்டுமே முதன்மையாக நிறுத்தப்பட்டு வணங்கப் படினும், அக் கருவறையைச் சூழ்ந்துள்ள இடங்களில் வேறு பல தெய்வங்களும் நிறுத்தப்பட்டுப் பராவப்படுகின்றன. அவை தம்மில் முதன்மையான சிலவற்றில் வரலாறுகளை மட்டும் ங்கெடுத்துக் கூறுவாம்.

சிவலிங்கமானது குவிந்து நீண்ட அனற்கொழுந்தின் வடிவையே குறிக்குமென்பதும், அதனையே மிகப் பழைய காலத்திருந்து தமிழ் மக்கள் இறைவனுருவாகக் கருதி வணங்கி வரலாயின ரென்பதும், அவ்வனற்கொழுந்திற் சிவந்து காணப்பட்ட ஒளிவடிவை இறைவனாகவும் அதன் கட் சிறுநீல நிறமாய் அடங்கிக் காணப்படும் ஒளி வடிவை இறைவியாகவுங் கருதி அவர் வழுத்தி வரலாயினரென்பதும் மேலே தெளிவு படுத்தப்பட்டன. அனற்கொழுந்தை யொப்பதோர் உருவினைக் கல்லில் அமைத்து நந்தமிழ் முன்னோர் நெடுங்காலம் அதனையே வணங்கி வந்தா ராயினுங், காலஞ் செல்லச் செல்ல, அறிவும் நாகரிகமும் பெருகப்பெருக, வெறும் பிழம்புவடிவில் வைத்துக் கடவுளை வணங்குவதிற் றமிழறிஞர் மனவமைதி பெறாராய், அப்பனை ஓர் ஆண்மகன் வடிவில் அமைத்தும் அம்மையை ஒரு பெண்மகள் வடிவில் அமைத்தும் வணங்கு தற்குப் பெருவிழைவு கொண்டார். பல திறப்பட்ட பிறவி களுள்ளும், மக்கட் பிறிவியிலும் மக்களுருவிலுஞ் சிறந்தது பிறிதில்லை. ஆகவே, மக்களுட் சிறந்தார் அனைவரும் முழுமுதற் கடவுளைத் தம்போன்ற மக்கள்வடிவில் வைத்து வணங்க ஆவல்கொள்வரே யல்லாமற், றம்மினுங் கீழ்ப்பட்ட விலங்குகள் புட்கள் பாம்புகள் மீன்கள் முதலியவற்றின் வடிவில் வைத்து வணங்க ஆவல் கொள்ளார். இது சிறந்தோர்க்குரிய நெறி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/224&oldid=1592958" இலிருந்து மீள்விக்கப்பட்டது