உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

ஆ. காதல்மணம்

இனி, ஆறறிவுவாய்ந்த மக்கட் பிறவியும் பிற சிற் றுயிர்ப்பிறவிகளும் இம்மாநிலத்தில் தொடர்ந்து வருவ தெல்லாம் ஆண்பெண் சேர்க்கையினாலன்றோ? மக்களல் லாத பிற வுயிர்களிலோ அச்சேர்க்கையானது பெண்ணின் விருப்பத்திற்கு இணங்கியே நடைபெறுகின்றது. பறவை யினங்களிற் பெண்பறவையானது தனக்கியைந்த ஓர் ஆண் பறவையுடனே மட்டுங் கூடிவாழும்: தனக்கியையாத ஆணுடன் கூடாது: தனக்கியைந்த ஆண்ஒன்றையே யன்றி வேறோர் ஆண் பறவையையும் நாடாது. பறவைகளின் மாட்டுக் காணப்படும் இந்த உயர்ந்த காதலொழுக்கம் மக்களிடத்தும் பிறழாது அமையுமானால், மக்கள் வாழ்க்கையில் ஏதோர் அல்லலும் உண்டாக மாட்டாது. ஆனாற், பெண்ணின் கருத்தையுந் காதலையும் அறியாமற் பிறர் புணர்த்தப் புணரும் போலிமணமே அன்பும் இன்பமும் இன்றி இந்நாளில் நடைபெற்று வருகின்றது. இதனாற், பெண்ணுக்குக் கற்பொழுக்கம் நிலையாமை யோடு, ஆணும் பலவாறு பிழைபட ஒழுகிப் பிணிப்பட்டு வாழ்நாள் குறுகப் பெறுகின்றது. ஆகவே, சாதி குலம் பிறப்புப் பொருள் பட்டம் நிலை முதல முதலான காரணங்களைப் பெரிது பாராட்டிக், காதலன்பைக் கருதாமற் செய்யும் போலி மணத்தை அறவே ஒழித்துவிடல் வேண்டும். வேறெந்தக் காரணத்தையும் ஒரு பொருட்டாக நினையாமற் பெண்ணும் ஆணுங் காதலன்பாற் ஆ கூடுங் கூட்டத்திற்கே முதன்மை தரல்வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/325&oldid=1593060" இலிருந்து மீள்விக்கப்பட்டது