உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 31.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

1. தமிழர் இன்னாரென்பது

இந்நாளில் இவ்விந்திய தேயத்தின் வடக்கே இமய மலையிலிருந்து தெற்கே குமரிமுனைவரையிலும், வடமேற்கே பஞ்சாபிலிருந்து வடகிழக்கே அசாம் வரையிலும், மேற்கே மலையாளக் கரையிலிருந்து கிழக்கே வங்காளக் குடாக் கடற்கரை வரையிலும் நிறைந்திருக்கும் பல்வேறு வகையான மக்கட் கூட்டத்தாரில், தமிழ் மக்களுக்கே உரிய சமயக் கொள்கையினை ஆராய்ந்து முடிவு கட்டுதற் பொருட்டு இம்மாநாடு கூட்டப்பட்டிருக்கின்றமையின், தமிழரது மதத்தை நன்காராய்ந்து யான் எனது தலைமையுரையினை நிகழ்த்தல் வேண்டு மென்று இதன் அமைச்சர் கேட்டுக் கொண்டதற்கு இசைந்து 'தமிழர் மதத்தின் முன்னை முன்னை நிலை பின்னை நிலை’களைப் பற்றி ஆராய்ந்து பேசுதற்குப் புகுகின்றேன்.

முதலில் தமிழர் என்பார் யாவரென்பதனைச் சிறிது ஆராய்ந்து பார்த்தல் வேண்டும். தமிழ்மொழி பேசுவோரே தமிழரெனின்; தமிழ்மொழிக்கு உரியரல்லாத மகமதியருங், கிறித்துவரும், வெள்ளைக்காரரும் மகாராட்டிரரும் தெலுங்கர், கன்னடர், மலையாளர் முதலியோரும், வேறு பிறரும் இஞ்ஞான்று இந்நாட்டில் தமிழ் மொழி பேசக் காண்கின்றோ மாகலின், தமிழ் பேசுதல் ஒன்றே கொண்டு அவரெல்லாரையுந் தமிழர் எனக் கூறுதல் பொருந்துமோ? உரைமின்கள்! அது பொருந்தா தாகலின், வேறு பொருத்தமான தக்க சான்றுகள் காண்டுதான் தமிழர் இன்னாரென நாம் ஆராய்ந்து துணிதல் வேண்டும்.

மக்கட் கூட்டத்தாரைப் பல வகுப்பினராய்ப் பிரித்தறிதற்கு மேனாட்டாசிரியர்கள் சில திட்டமான அடையாளங்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். அவை: உடம்பின் உயரம், உடம்பின் நிறம், தலைமயிரின் வடிவம் நிறம், கண்களின் அமைப்பு நிறம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_31.pdf/68&oldid=1592789" இலிருந்து மீள்விக்கப்பட்டது