உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 4.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அவனைக் கண்டு யாரேனும் உவப்பார்களா? ஒரு பெண் பேரழகாற் சிறந்தவளாயிருப்பினும் மடமை நிரம்பினவளாய்ச் செவ்வையாகப் பேசவும் தெரியாமல், அழுக்காடை யுடுத்து அருவருக்கத்தக்க செய்கையும் உடையவளாயிருந்தால் அவளைக் கண்டு யாரேனும் மனம் விரும்புவார்களா? ஆதலால், உடம்பின் அழகே எல்லார்க்கும் விருப்பத்தை உண்டுபண்ணும் என்பது எங்ஙனம் பொருந்தும்? உடம்பின் அழகு இல்லாத வராயிருந்தும் நற்குணமுஞ் சொல்நயமுந் தூயநடையும் உள்ள ஒருவரை எல்லாரும் விரும்புதல் ஒவ்வொரு நாளும் பழக்கத்திற் காணலாமன்றோ? அப்படியானால், உடம்பின் அழகிலே நம் எல்லார்க்கும் இயற்கையாகவே விருப்பமுண்டாவது ஏன் என்று வினவின், முதலிற் சிறிது நேரமேனும் பார்ப்பவர்களுக்குக் கவர்ச்சியை உண்டுபண்ணுவதுபற்றி உடம்பழகிலே நமக்கு விருப்பமுண்டாகின்றது. என்றாலும் உடம்பழகு மட்டுமே எப்போதும் நிலையாக மக்களைக் கவரமாட்டாது.உள்ள அழகு மட்டுமே அவர்களை எப்போதுந் தன்மாட்டு இழுக்கும் ஆற்றலுடையதாயிருக்கின்றது. அவ்வாறாயின், உடம்பினழகு வேண்டுவ தில்லையோவென்றால், உள்ளத்தின் அழகுடை யார்க்கு உடம்பினழகும் அமைந்திருந்தால், அஃது அழகுள்ள மங்கைக்கு அணிந்த மணிக்கலங்கள் போற் சிறக்குமே யல்லாமல், மனநன்மையில்லாதார்க்குள்ள உடலழகானது, அழகற்ற பெண்ணுக்கு மாட்டிய அணிகலன்கள் போற் பயனின்றி மங்குமென்பது எவரும் அறிந்ததேயாம்.

இனி,உள்ள அழகு என்பது யாதோவென்றாற் கூறுகின்றோம். உள்ளம் என்பது அறியும் அறிவுடைய உயிரு மாகும். அறிவுடைய உயிர் ஒன்றை அறிதலும், ஒன்றை அறியு மிடத்து அதன் அறிவு அழகுற்றும் விளங்கும், அழகின்றியுந் துலங்கும்.ஒன்றை விரும்புமிடத்தும் அதன் விருப்பம் அழகுடனுந் துலங்கும் அழகின்றியுங் கலங்கும். ஒன்றைச் செய்யுமிடத்தும் அதன் செய்கை அழகாயும் இருக்கும். அழகின்றியுங் கருக்கும். இப்படிப்பட்ட இயற்கை எல்லா உயிர்களிடத்துங் காணப் பட்டாலும், மக்களாய்ப் பிறந்த உயிர்களிடத்து மட்டுமே அது மிகவும் நன்றாய்ப் புலப்பட்டுத் தோன்றுகின்றது. இன்னும், இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_4.pdf/39&oldid=1624232" இலிருந்து மீள்விக்கப்பட்டது