உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 5.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* தொலைவிலுணர்தல்

37

இருளிலே கொண்டு போய்ச் சொரிந்து, பின்னர் அப் பொருள் முழுதுஞ் சொரிந்தவிடந் தெரியாமையால் முழுதுமெடுக்க ஏலாமற், சிறிது சிறிதே கைக்கொண்டு வருகின்றோம். விழித்திருக்கையிற் றுலக்கப்படுகின்ற நமதுயிரின் அறிவு மறுபடியும் தூங்குகையில் அப்பேரிருட் சாயலால் மங்கிப் போகின்றது. இதனாலேதான் மக்களுயிர்க்கு மறதித்தன்மை மிகுந்து காணப்படுகின்றது. ஊசி நுனையை உடம்பினுள்ளே அழுந்தச் செருகினாலும் அதனை அறியமாட்டாத அத்துணை அறியாமையொடு மெய்ம்மறந்து தூங்குகின்றவனுக்கு, விழித் திருந்தாலும் அறிவு கூர்மையுற்று விளங்காது, அவ்விடத்தே மறதித் தன்மை மிக வேரூன்றி நிற்கும் இவ்வாறு இயற்கையிலேயே அறிவிழத்தற்கு ஏதுவான அறியாமைத் துயில் எல்லா வுயிர்களிடத்தும் நிறைந்திருப்பினும், அதனை நீக்கிக்கொள்ளும் நன்முயற்சி மக்களுயிர்கள் மாட்டு மட்டுமே காணப்படுகின்றது; அங்ஙனம் மிக அரிதிற் காணப்படும் அந் நன்முயற்சியினையுங், கட்குடித்துஞ் சாராயம் மாந்தியுங் கஞ்சா அவின் தின்றும் எந்நேரமும் ஒழிவின்றிப் போக்கித், தமதறிவை மீளா இருளில் முழுகுவிக்கும் மாந்தரின் தீய புன்செயல் நிரம்பவும் அருவருக்கற் பாலதாகும். அந்தோ! இவர் தமது புல்லறிவு கொண்டு தம்மைக் கடைப்பட்ட விலங்குகளினுங் கடைப்பட்ட ப்பட்டவராக ஆக்கிக்கொள்வது கண்டு எவர்தாம் அவர் தன்மைக்கு இரங்காமற் போவர்? இயற்கையிலேயே உயிரது அறிவின் வலியை உரிஞ்சும் வல்லிருள் உயிர்களின் உள்ளத்தே அமைந்திருக்கத், திருவருளுதவியாற் சிற்சில பொழுதுகளேனும் விளங்காநின்ற சிறிய அறிவை அது தானும் விளங்கவொட்டாது கள்ளானுங் கஞ்சாவானும் மயங்கச்செய்யும் மாந்தர் ஏதுக்குத்தான் இம் மக்களுடம்பிற் பிறந்தனரோ அறிகிலம். அருட்களஞ்சியமாகிய ஆண்டவன் செயலால் விழித்திருக்கும் போது விரிந்து விளங்கும் இச்சிறிய அறிவின் உதவியைக் கள்சாராயங் கஞ்சா அவின் முதலான மயக்கப் பொருள்களாற் பாழாக்கிவிடாது, அதனைப் பண்படுத்தி அவ்வழியே சென்று தூக்கத்திலுள்ள அறியாமை வல்லிருளைத் தொலைக்க வகை தேடுதல் மக்கட்பிறவி யெடுத்தார் செய்தற்குரிய பயன்படு செய்கையாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_5.pdf/70&oldid=1576642" இலிருந்து மீள்விக்கப்பட்டது