சாகுந்தல நாடகம்
107
அப்போதெல்லாம் எழுந்திராது உறங்கிக் கிடந்த இப் பாழும் நெஞ்சமானது, பரிவால் துன்பமுறுதற்கே இப்போது விழித்துக்கொண்டது!
சானுமதி : ஆ! அவ்வறியாத பெண்ணின் வினை அப்படியா இருக்கிறது?
விதூஷகன் : திரும்பவும் இவர் சகுந்தலை நோயாற் பிடிபட்டிருக்கின்றார். இவர்க்கு எப்படி மருந்தூட்டி இதனைத் தீர்க்கிறதென்பது எனக்குத் தெரியவில்லை.
கஞ்சுகி : (கிட்டவந்து) வேந்தற்கு வெற்றி சிறக்க! எம்பெருமான்! இளமரக்காவிற் பலவிடங்களும் ஆராய்ந்து பார்க்கப்பட்டன. இன்பம் நுகர்தற்குரிய எந்தவிடத்திலுந்
தங்கள் விருப்பம்போல் இருக்கலாம்.
அரசன்
ஏடி வேத்திரவதி!
பிசுனரென்னும்
அமைச்சரிடத்தில் நான் சொன்னதாக இவ்வாறு சொல் : “இரவில் நெடுநேரங் கண்விழித்திருந்தமையால் இன்று அறங்கூறும் அவையத்திற்கு வருதல் நமக்குக் கூடாமையா யிருக்கின்றது. தங்களால் ஆராய்ந்து தெளியப்பட்ட குடி மக்களின் வழக்குகள் ஏட்டில் எழுதி நம்மிடம் விடுக்கப் படட்டும்."
(
பிரதீகாரி : பெருமான் கட்டளைப்படியே. (போய் விடுகிறாள்.)
அரசன் : ஏடா வாதாயனா! நீயும் உன் கடமையைப் பார்க்கப்போ.
கஞ்சுகி : மன்னன் கட்டளைப்படியே.(போய்விடுகிறான்.)
விதூஷகன் : ஓர் ஈயும் இல்லாமல் ஒட்டிவிட்டீரே. (பகற் கால) வெப்பத்தை நீக்குதலாற் குளிர்ச்சியாயும் இனிதாயும் இருக்கின்ற இவ்விளங்காவின் இந்த விடத்தில் இனி நீர் பொழுது போக்கலாம்.
அரசன் : தோழா! “பட்டவிடத்தே படும், கெட்ட குடியே கெடும்” என்னும் பழமொழி முற்றும் உண்மையே யாகும்.