உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 6.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாகுந்தல நாடகம்

109

அவள்மேற் பலவேறு வகையில் வெளியிட்ட அவடன் கணவன் காதலை அவட்கு விரித்துரைப்பேன். (அவ்வாறே கொடியின் பக்கத்தே நிற்கின்றாள்.)

அரசன்

நண்பா! சகுந்தலையைப் பற்றிய முன் நிகழ்ச்சிகளையெல்லாம் இப்போது நினைந்து கொண்டேன்; உனக்கும் அவற்றைச் சொன்னேனே! யான் அவளை விலக்கி விட்டபோதும் நீ என் பக்கத்திலில்லை; அல்லது அதற்கு முற்பட்டாயினும் நீ அவள் பெயரைச் சொன்னாயில்லை. என்னைப் போலவே நீயும் மறந்துவிட்டனையோ?

விதூஷகன் : நான் மறக்கவில்லை. ஆயினும், நீர் எல்லாஞ் சொல்லிய பின் முடிவிலே "இஃது உண்மையன்று, வெறும் பகடிப்பேச்சு" என்றீரே, நானோ களிமண் மூளையுள்ள வனாதலால், நீர் சொல்லியதை அப்படித்தான் என்று எடுத்துக் கொண்டேன். ஆனாலும், ஊழ் எல்லாம் வல்லது.

சானுமதி : உண்மையிலே அஃது அப்படித்தான்!

அரசன் : (நினைத்துப் பார்த்து) ஓ நண்பா! என்னைக் காப்பாற்று!

விதூஷகன் : ஐய, இஃதென்ன? இது நுமக்குத் தக்கதன்று; அறிவுடையோர் தாம் கவலைப்பட்டுத் துயருறுதற்கு ஒருபோதும் இடங் கொடுப்பதில்லை. பெரும்புயற் காற்றிலும் மலைகள் அசையாமல் இருக்க வில்லையா?

அரசன் : நீக்குண்ட துன்பத்தால் என் காதலி அடைந்த நிலையை யான் நினைவுகூரும் பொழுது என்னால் அத் துயரம் தாங்க முடியவில்லை.

கொடியேனால் நீக்குண்டு கூடுமுற வினரோடும்

படர்வதற்கென் காதலிதான் பரிவுறுங்காற் பெருந்தந்தைக்

கடியாராஞ் சீடரவர் போற்பெரியர் ஆர்த்திந்த

இடமேநில் லெனவொழுகும் நீர்விழியாள் ஏங்கினளே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_6.pdf/140&oldid=1577264" இலிருந்து மீள்விக்கப்பட்டது