268
மறைமலையம் -6
அன்பும் இன்பமும் அருளும் உடையவராய் இருத்தல் ஒன்றே நமக்கு நேர் நுகர்வா யிருத்தலாலும், பேரின்பத்தையே அவாவும் நமக்கு அப் பேரின்பத்தை அருளும் இன்பவுரு வினரான அவர் நமது ஆணவ மலத் துன்பத்தை முதலிற் றுடைத்தருளும் பேருதவிச் செய்கை யுடையரா யிருத்தலாலும் அவர்தம் விளக்கமான அவ்வரும் பெருந்தன்மைகளை வாழ்த்தியும் நினைந்தும் வழுத்தியும் பேறு பெறுதற்குரிய நாம் அவற்றை இடையறாது நம் நினைவில் எழுப்புவிக்கும் உருத்திரன் சிவன் என்னும் பெயர்களால் அவரை வழங்கக் கடவேம் என்றும், இங்ஙனம் வழங்கும் அரிய பெரிய உண்மை சைவ சமயத்திலன்றி வேறெதினுங் காணப்படாமையால் இதுவே ஏனை எல்லாச் சமயங்களிலும் மாட்சியுடைத்தென உணரப் பெற்றேம் என்றும் எல்லாரும் உறுதி கொண்டு அகமகிழல் வேண்டும்.
மக்களிற் சிறந்தாராயுள்ள சிலரைக் கண்டு வணங்குதலா லேயே, நம்மனோர்க்கு அத்தனை அன்பும் இன்பமும் உண்டாகு மானால், எல்லாச் சிறப்புக்குந் தலைவனாய் நிற்கும் இறைவனைக் கண்டு வணங்குதலால் நமக்கு இன்னும் எவ்வளவு மிகுதியான அன்பும் இன்பமும் உண்டாகல் வேண்டும்! ஆதலால், மக்களுக்குக் கட வுளுணர்ச்சியுங் கடவுளை வணங்குதலும் வேண்டாவெனக் கரையும் ஒரு சிலரது வெற்றுரை மக்களுக்குச் சிறிதும் பயன்படாதென்று உணர்ந்து கொள்க.
கடவுளை அச்சத்தால் வணங்குவோர் நிலைக்கும், அன்பினால் வணங்குவோர் நிலைக்கும் உள்ள வேறுபாடு நன்கு விளங்காநிற்கும். "கடவுள் ஒப்புயர்வு அற்ற செல்வமும் அறிவுந் தலைமையும் வலிமையும் உடையர். அவரை வணங்காது ஒழியின் நமக்குந் தீங்குண்டாம்” என்னும் அளவே கருதி, அவரை அச்சத்தால் வணங்குவோர் தாழ்ந்த நிலையினராவர், “மேற் குறித்த வளங்களை யுடையனாத லுடன், எம்பெருமான் ஒன்றுக்கும் பற்றாத எளியேங்களிடத்து அளவிறந்த அன்பும் இரக்கமும் உடையன்” என்று கருதி அவனை அன்பினால் வணங்குவோர் உயர்ந்த நிலையினராவர்.