உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

11. விளக்க உரைக் குறிப்புகள்

இம் முல்லைப்பாட்டிற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இப்பாட்டுச் சென்றவழியே உரை உரையாமல், தம் உரைக்கிணங்கப் பாட்டை இணக்குவான் புகுந்து தமக்கு வேண்டியவாறெல்லாஞ் சொற்களை அலைத்தெடுத்து ஓர் உரை எழுதுகின்றார். இங்ஙனம் எடுத்து உரை எழுதுவனவெல்லாம் ‘மாட்டு' என்னும் லக்கணமாமென அதனியல்பைப் பிறழ உணர்ந்து வழுவினாரென்பதனை முன்னரே காட்டினாம்; ஆண்டுக் கண்டு கொள்க. இனி இங்கு அவர் உரையினை ஆங்காங்கு மறுத்துச் செய்யுட் பொருள் நெறிப்பட்டொழுகும் இயற்கை நன்முறை கடைப்பிடித்து, வேறொரு புத்துரை விளங்கும் வண்ணஞ் சில உரைக்குறிப்புக்கள் தருகின்றாம்.

(1- 6 அடிகள்) பெரிய கையிலே நீர் ஒழுக நிமிர்ந்த திருமாலைப்போல, உலகத்தை வளைத்துக் கடல்நீரைப் பருகி வலமாக எழுந்து மலைமுகடுகளில் தங்கி எழுந்த முகில் முதற்பெயலைப் பொழிந்த மாலைக் காலம் என்க.

கரிய நிறம் பற்றியும், உலகமெல்லாம் வளைந்த தொழில் பற்றியும், நீர் ஒழுகா நிற்ப நிமிர்ந்தமை பற்றியுந் திருமாலை முகிலிற்கு உவமை கூறினார். மாவலி வார்த்தநீர் கைகளினின்று ஒழுகத் திருமால் நிமிர்ந்ததுபோல, நீரைச் சொரிந்து கொண்டே உயர்ந்த முகில் என்று உரைக்க.

நனந்தலை -அகன்ற இடம். நேமி - சக்கிரம். வலம் புரி பொறித்த - வலம்புரிச் சங்கை வைத்த; "வலம்புரி பொறித்த வண்கை மதவலி" என்றார் சீவகசிந்தாமணியிலும். 'மாதாங்கு என்பதனை ‘மால்' என்பதனொடு கூட்டித் 'திருமகளை மார்பில் தாங்கும் மால்' என்று பொருளுரைக்க. தடக்கை - பெரிய கை; “தடவுங் கயவும் நளியும் பெருமை" தொல் - உரியியல், 24. பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/100&oldid=1578952" இலிருந்து மீள்விக்கப்பட்டது