உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 9.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை

21

பன்முறையும் நுண்ணிதாக அளந்தளந்து பார்த்துப் பின் அதனைத் திறம்பட வரைந்தால் மட்டும் அங்ஙனம் வரைந்த ஓவியத்தைக் கண்டு வியக்கின்றோம்; தான் விரித்து விளக்கமாய் எழுதவேண்டும் பகுதிகளில் அவன் ஒரு சிறிது வழுவி விட்டானாயினும் அவ்வோவியத்தின்கண் நமக்கு வியப்புத் தோன்றா தொழியும். நல்லிசைப்புலவனோ அங்ஙனம் அவனைப்போல் ஒவ்வொன்றனையும் விரிவாக விளக்கிக் காட்ட வேண்டும் வருத்தம் உடையான் அல்லன். ஓவியக்காரன் புலன் அறிவைப் பற்றி நிற்பவன்; புலவனோ மன அறிவைப் பற்றி நிற்பவன்.

புலனறிவோ பருப்பொருள்களை விரித்தறியும் இயல்பி லுள்ளது; மனவறிவோ அப்புலனறிவின் அகத்தே நின்று நுண்ணிதாம் பொருளையுந் தானே ஒரு நொடியில் விரித்தறியும் ஆற்றல் வாய்ந்தது! அம்மம்ம! மனவறிவின் ஆற்றலை யாம் என்னென்று எடுத்துரைப்பேம்! அணுவை ஒரு நொடியில் மலைபோற் பெருகச் செய்யும், மலையை மறுநொடியில் ஒர் அணுவினுங் குறுகச்செய்யும். இங்ஙனம் வியப்பான இயல்புடைய மனவறிவினை நல்லிசைப் புலவன் என்னும் மந்திரக்காரன் தன் மதிநுட்பமாகிய மாத்திரைக் கோலால் தொட்ட அளவானே அது திடுக்கென்றெழுந்து அவன் விரும்பிய வண்ணமெல்லாஞ் சுழன்று சுழன்றாடும்.

இன்னும் இதனைச் சிறிது விளக்குவாம். ஓவியக்காரன் அச்சுறுத்தும் அகன்றதொரு கரிய பெரிய காட்டினை எழுதல் வேண்டுமாயிற் பல நாளும் பலகாலும் அதன் இயற்கையினை அறிந்தறிந்து பார்த்துப், பரிய மரங்கள் அடர்ந்து ஓங்கி ஒன்றோ டொன்று பிணைந்து வெளிச்சம் புகாமல் தடை செய்து நிற்றலையும், அக்காட்டின் வெளித்தோற்ற அமைப்பினையும், மரங்களின் இடையிலுள்ள இடுக்கு வெளிகளில் நமது பார்வை நுழையுங்கால் அவை தோன்றுந் தன்மையினையும், உள்ளே இருள் திணிந்து பரவியிருத்தலையும் அங்குள்ளவாறே சிறந்த பல வண்ணங்களைக் குழைத்து இரட்டுத் துணியின்மேல் மிக வருந்தி முயன்று எழுதிக்காட்டல் வேண்டும்; இஃது அவனுக்குப் பல நாள் வினையாக முடியும். நல்லிசைப் புலவனோ, 'பரிய மரங்கள் அடர்ந்தோங்கிப் பிணைந்து நிற்கும் இருண்ட காடு' என்று சில று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_9.pdf/54&oldid=1578901" இலிருந்து மீள்விக்கப்பட்டது