பக்கம்:மலரும் நினைவுகள்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76; - மலரும் நினைவுகள் கருத்துகள் கேட்பார் உள்ளத்தில் நிலைத்து இடம்பெறும். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதைக் குறள் போல்’ என்று உவமை கூறும் விற்பன்னர். இடுக்கண் வருங்கால் நகுக' (குறள்-621) என்ற வள்ளுவர் கூற்றைக் கடைப் பிடிக்கும் மனத்திட்பம் உடையவர். வாணிகத்தில் நட்டம் மலைபோல் அழுத்தினும் மாமல்லபுரத்துச் சிலைபோல் சிரித்துக் காணப்படுவார். அழித்துக் குடையும் அழிநோய் வருத்தினாலும் குலுங்கச் சிரித்துக் குலாவுவார். நாளும் இறைவனை ஒன்றி வணங்கும் ஒருமைப்பாடுடையவர். விஞ்ஞானக் காதலர் எனினும் எஞ்ஞான்றும் மெய்ஞ் ஞானம் வேண்டும் விறலர். பொய்ஞ்ஞானம் தீருவதற்கு மெய்ஞ்ஞானமே நல்விளக்கு என்பதை நன்கு அறிந்து தெளிந்தவர். தாம் நிறுவிய கல்லூரிகளையெல்லாம் இணைத்து பல்கலைக் கழகம் காண நினைத்தார். நல்ல கனவு; நல்ல குறிக்கோள். இத் தலையான வேட்கை அவர் காலத்தில் நனவாகவில்லை. எல்லோரும் அவர் விருப்பத்தை நன்கு அறிவர். தாம் வாழ்ந்த காலத்தே நடுவண் அரசுடன் கடிதப்போக்குவரத்து செய்து அடிப்படை கோலி வைத் திருந்ததும் எல்லோருக்கும் தெரியும். உடலும் குன்றியது. செல்வ வளமும் குறையத் தொடங்கியது, இந்த நிலையில் ஒருநாள் (பிப்பிரவரி 1957) வள்ளல் அழகப்பர் கல்லூரி வளாகத்திற்கு வந்தார். இரு சக்கரம் அமைந்த சிறு வண்டி யில் சாய்ந்த வண்ணம் அனைத்தையும் பார்வையிட்டார். கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றினார். பயிற்சிக் கல்லூரிக்கு வந்தபோது அடியேன் அவர்மீது வைத்த கண் வாங்காது பார்த்தவண்ணம் இருந்தேன். கண்கள் குளமாகி நீரும் வடியத் தொடங்கியது. அக் காட்சி இன்றும் நினைவிற்கு வருகின்றது. மக்கள் யாவரும் அவரை வாழ்த்திச் சென்னை செல்ல விடை தந்தனர். இதுவே கல்லூரி வளாகத்திற்கு அவருடைய இறுதி வருகை என்று அன்று யாரும் நினைக்கவில்லை.