பக்கம்:மாணவர்களுக்கு.pdf/25

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அ. புகழ்

மனிதன் முயன்றால் பெறமுடியாதது எதுவுமே இல்லை என்பது மேலை நாட்டினர் கருத்து. இதை மறுத்து 2000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு தமிழ்ப் புலவர் கூறியிருக்கிறார். அது மனிதன் முயன்றால் பெறமுடியாதது ஒன்று உண்டு. அது புகழ் என்பது. புகழ் தேடிப் பெறுவதல்ல. விலைக்கு வாங்குவது மல்ல. அதிகாரத்தால் வாங்குவதுமல்ல. அக்கிரமம் பண்ணிச் சேர்த்து வைப்பதும் அல்ல. புகழ் விரும்புகிறவனை அடையாது. எவ்வளவு முயன்றாலும் பெறமுடியாது என்பது அவரது கருத்து.

அரசியல் தலைவர்களில் சிலர் சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் பொழுது, தன் தொண்டர்களுக்குப் பணம் அனுப்பி மாலைகளையெல்லாம் வாங்கி வரச்செய்து, வழியிலுள்ள இரயில் நிலையங்களிலெல்லாம் ஜே !போடச் சொல்வதுண்டு. இது புகழ் ஆகுமா? இருந்தாலும் நிலைக்குமா? என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. பின் அந்தத் தொண்டர்கள் அத்தலைவரோடு மாறுபட்டு வேறு கட்சிக்குப் போய் அத்தலைவன் எழுதிய கடிதங்களையும் அனுப்பிய பணத்தாள்களையும் வெளியிட்டு அத்தலைவனை அவமானப்படுத்தியதுமுண்டு.

புகழ் விரும்புகிறவனை அடையாது. அதை எவன் வெறுக்கிறானோ அவனை அது வந்தடையும் என்பது அப்புலவர் பெருமகன் கருத்து. அதுமட்டுமல்ல. அதற்கு அவர் ஒரு உவமையும் கூறியிருக்கிறார். அது, `புகழ் ஒரு நிழல்' என்பது, இரண்டுமே மூன்று எழுத்துக்கள். இரண்டிலுமே தமிழுக்கே சிறப்பான ழகரம் அமைந்திருக்கிறது.