பக்கம்:மாணவர்களுக்கு.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி.ஆ.பெ. விசுவநாதம்

29

அழிந்து போன தமிழ் இலக்கியங்களில் அதுவும் ஒன்று. இப்போது 212 பாடல்கள்தான் கிடைத்திருக்கின்றன. அவற்றுள் ஒன்று வறுமையால் ஏற்பட்ட பஞ்சத்தின் உச்ச நிலையை நமக்குக் காட்டுகிறது.

மழை பெய்யாவிட்டால் பயிர் விளையாது, புல் முளையாது. ஆடு மாடுகளுக்குத் தண்ணிர் கிடைக்காது, பூசனை நடக்காது. அரசாட்சியும் அழியும், மக்களும் துன்புறுவார்கள் எனப் பல இலக்கியங்கள் கூறும். இதைவிடக் கடுமையும், கொடுமையுமான ஒரு நிலையை மக்களல்லாத இரண்டு உயிர்களை உவமையாக வைத்து இப்பாடல் காட்டுகிறது.

மழை பெய்யாமையால் கடும் வெயிலால் ஏரி வற்றிப்போய், ஒரே ஒரு தவளைமட்டும் தத்தித் தத்தி உயிர்பிழைக்க மேலேறிக் கரைக்கு வந்து கொண்டு இருந்தது. அடுத்து ஒரு புற்றில் இருந்த பாம்பு வெப்ப மிகுதியால் துடிதுடித்து, தண்ணீர் குடிக்க எண்ணி, ஏரிக்கரைக்கு வந்து, படமெடுத்து ஏரியைப் பார்த்தது. அங்கு நீர் வறண்டு கானல் நெருப்பு தகித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் படமெடுத்ததோடு தரையில் சாய்ந்து உயிரை விட்டு விட்டது. குளத்தில் இருந்து, உயிர் பிழைக்க எண்ணித் தத்தித்தத்தி வந்த தவளை வெப்பம் தாங்காமல், செத்துக் கிடக்கும் பாம்புப் படத்தின் நிழலில் நுழைந்து. "அப்பா உயிர் பிழைத்தோம்" என்று மகிழ்ந்ததாம். எப்படி இந்த உவமை! எப்படி இந்த இலக்கியம் மழை பெய்யாது ஏற்பட்ட பஞ்சத்தின் உச்ச நிலையை இதைவிடச் சிறப்பாக எந்தமொழி இலக்கியமும், எவரும் காட்டியதில்லை.