பக்கம்:மாணவர் தமிழ் இலக்கணம்-வகுப்பு 5.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34


தன்மை ஒருமைவினைகள் : “அல், அன், என், ஏன்' என்ற விகுதிகளைக் கொண்ட வினைச்சொற்களே தன்மை ஒருமை வினைகளாம். (உ-ம்) நடப்பல், நடப்பன், நடந்தனென், நடந்தேன்.


தன்மைப்பன்மைவினைகள்: “அம், ஆம், எம். ஏம், ஒம், கும், டும், தும், றும்," என்ற விகுதிகளைக் கொண்ட வினைச்சொற்களே தன்மைப் பன்மை வினைச் சொற்களாம். (உ-ம்) நடப்பம், நடப்பாம். நடப்பெம், நடப்பேம், நடப்போம், உண்கும். உண்டும், செல்லுதும், சேறும்.


முன்னிலை ஒருமை வினைகள்: “ஐ, ஆய், இ" என்ற விகுதிகளைக் கொண்ட வினைச்சொற்களே முன்னிலை ஒருமை வினைச் சொற்களாம். (உ-ம்) நடந்தனை, நடந்தாய், சேறி, (செல்வாய்).


முன்னிலைப் பன்மை வினைகள்:- "மின், இர், ஈர்" என்ற விகுதிகளையுடைய வினைச் சொற்களே முன்னிலைப் பன்மை வினைகளாம். (உ-ம்) நடமின், நடந்தனிர், நடந்தீர்.


படர்க்கை ஆண்பால் வினைகள்:- 'அன், ஆன்' என்ற விகுதிகளுடைய வினைச் சொற்களே படர்க்கை ஆண்பால் வினைகளாம். (உ-ம்) நடந்தனன், நடந்தான்.


படர்க்கைப் பெண்பால் வினைகள்:- 'அள், ஆள்' என்ற விகுதிகளுடைய வினைச் சொற்களே படர்க்கைப் பெண்பால் வினைச் சொற்களாம். (உ -ம்) நடந்தனள், நடந்தாள்.