பக்கம்:மாணவர் மாணவியருக்கு நீதிக் கதைகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

25

நாங்கள் குறிப்பிட்ட நேரம் வரை உழைக்கிறோம். கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கிறோம், நாளைய வேலையை நாளை பார்ப்போம் என்று எண்ணி, இரவில் அமைதியாகத் தூங்குகிறோம். போதும் என்ற மனநிறைவோடு, மகிழ்ச்சியோடு தூங்கி எழுந்திருக்கிறோம். எதற்காகவும் கவலைப்படுவதில்லை” என்று கூறிவிட்டு, உடனே அவன் புறப்பட்டான்.

செல்வந்தர் அவன் கூறியதைக் கேட்டு பிரமித்துப் போனார்.

‘போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்று கூறுவர்.


15
அற்பப் புத்தி உடையவன்

சில ஆண்டுகளாக, ஒரு அரசனுக்கு குழந்தை பிறக்க வில்லை. மற்றொரு அரச குடும்பத்திலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளும்படி அமைச்சர்கள் முதலானோர் ஆலோசனை கூறினர். ஆனால், அரசன் அதை ஏற்க மறுத்து விட்டான்.

சில மாதங்களுக்குப் பிறகு, அரசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நாடு முழுவதும் மகிழ்ச்சியாக விழா கொண்டாடியது.

குழந்தை பிறந்த மகிழ்ச்சியின் நினைவாக, அரண்மனையில் பணிபுரிவோர் அனைவருக்கும் வேட்டி, துண்டு, புடவை முதலியவற்றை வழங்குமாறு உத்திரவிட்டான் அரசன்.

எல்லோரும் மகிழ்ச்சியோடு வேட்டி, துண்டு, புடவையோடு வீட்டுக்குத் திரும்பி வந்தனர்.