பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100 மாணிக்கவாசகர்



யும் வெளியிட்டு உரைக்கின்றார். இறுதி இரண்டு பாடல்கள் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்துவனவாக அமைந்துள்ளன.

3. கட்டறுத்தல்

சுட்டறுத்தல் என்பதற்குத் தன் செயலறுத்தல்; அஃதாவது உலகப் பொருள்களைச் சுட்டி மதவாதிய ஆன்ம போதத்தை ஒழித்தல் என்பது பொருள். உயிர்கள் ஐம்பொறிகள் முதலிய கருவிகளோடு கூடி நின்று அறியும் அறிவு ஒன்றைச் சுட்டியறியும்போது சுட்டுணர்வு எனப்படும். இங்ஙனம் சுட்டுணர்வினால் அறியப்படும் பொருள்கள் அனைத்தும் அளவுக்குட்பட்டவை; அழியும் தன்மையுடையவை. ஆதலின் அவை ‘அசத்து’ எனப்படுவன. ஐம்புலத் தொடக்கினின்றும் நீங்கிச் சுட்டிறந்து அறியும் அறிவு மெய்யுணர்வு எனப்படும். மெய்யுணர்வினால் அறியப் படுவதொன்றே "சத்து" எனப்படும். முழுமுதற் பொருளாகும் சுட்டுணர்வு என்றாலும், பாச ஞானம் என்றாலும் ஒன்றே. இச்சுட்டறிவினால் அறிந்தவற்றை அழுந்தியறிதலாகிய ஆருயிர் தான் முதல் எனக் காணும் உணர்வு "சிற்றுணர்வு". இதனைப் பசுஞானம் என்று வழங்குவர். அடிகள் இவ் விரண்டினையும் கடந்து திருவடியுணர்வாகிய சிவ ஞானம் கைவந்த நற்றவத்தர். ஆதலினால் சுட்டறிவினை அகற்றுதல் வேண்டும் என்று விண்ணப்பிப்பது இப்பதிகம். இதில்,

  வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர் 
     பெருமானே எனக்கேட்டு வேட்ட நெஞ்சாய்ப் 
  பள்ளங்தாழ் உறுபுனலில் கீழ்மே லாகப்
     பதைத்துருகும் அவர் நிற்க என்னை ஆண்டாய்க்கு 
  உள்ளந்தாள் நின்றுச்சி யளவும் நெஞ்சாய்
     உருகாதால் உடம்பெல்லாம் கண்ணாய் அண்ணா 
  வெள்ளந்தான் பாயாதால் கெஞ்சம் கல்லாய்
     கண்ணினையும் மரமாந்தீ வினையினேற்கே (1)