பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆலவாய் நிகழ்ச்சிகள் 137

 அறுத்துஉய்ந்தேன் இனி என் வழியே செல்வேன். எம்பெருமானாகிய இறைவன் உண்டு என ஐயமறநீர் உணர்ந்த மெய்யுணர்வால் நுமது செல்வம் தீங்கின்றி மேன்மேலும் பெருகியோங்கும்" என்று வாழ்த்துக் கூறி நமச்சிவாய வாழ்க எனத்தொடங்கும் சிவபுராணத்தை ஒதிக் கொண்டு அவ் விடத்தை விட்டுப் புறப்படுகின்றார். பாண்டியனும் அளவிறந்த பேரன்புடையவனாய் அவரைத் தொடர்ந்து சிறிது துரம் சென்று விடை பெற்றுத் தனது அரண்மனையை யடைந்து அடிகளின் திருவருட்செயலை வாழ்த்தியவண்ணம் இருக்கின்றான்.

வாதவூரடிகள் திருவாலவாய்த் திருக்கோயிலுட்புகுந்து சொக்கனை வணங்கிநின்று "எளியேனை உய்வித்த பெருமானே, என்பொருட்டுக் குதிரைகளைக் கொண்டு எழுந்தருளினாய்; முடிவருந்த மண் சுமந்தாய்; திருமேனிவருந்தப் பிரம்படியும் பட்டாய்” என்று சொல்லி நெஞ்சம் நெக்குருகிப் பரவிப் போற்றுகின்றார். ஆலவாய்ச் சொக்கன் அடிகளை நோக்கி, 'வாதவூர, நீ உத்தர கோசமங்கை, கழுக்குன்றம் ஆகிய தலங்களில் நமது திருமேனியைக் கண்டு மகிழ்ந்து கோவை என்னும் சிறந்த பனுவலைப் பாடிக்கொண்டு தில்லையம்பலத்தே வருக” என்றதோர் அருள்வாக்கினை விசும்பில் தோன்றுவித்தருள்கின்றார். இந்த அருள்மொழி யைச் செவிமடுத்த வாதவூரரும் தம் பயணத்தைத் தொடங்குகின்றார்.17


17. இந்த வரலாறு திருவாலவுடையார் திருவிளையாடல், பரஞ்சோதி முனிவர் திருவிளையாடல் இரண்டையும் தழுவியது.