பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை அருளிச் செயல்கள் 197



  ஆழி மழைக்கண்ணா ஒன்றும் கைகரவேல்!

என்று வேண்டுகின்றனர். நீ ஒரு வள்ளல்போல் வாரி வழங்க வேண்டும்; ஒன்றையும் கையிருப்பாக வைத்துக் கொள்ளாதே' என்பது அவர்களின் வேண்டுகோள்.

மழைவருதலைக் குறித்து அவர்கள் மானசிகமாகக் காணும் காட்சி மிக அழகாக உள்ளது. தம்முடைய குறிக்கோளை மிக அழகாக வெளியிடுகின்றனர். மேகங்களின் கருமை மழை வளத்திற்கு அறிகுறியல்லவா? ஆகவே, மழைக் கடவுள் கடலினுள் புகுந்து அங்குள்ள நீரை முகந்து கொண்டு, மிக்க ஆரவாரத்துடன் வானத்தில் தோன்றுவான் என்று எண்ணுகின்றனர். தவிர, மேகத்தின் நிறம் கண்ணனுடைய அருள் வடிவத்திற்கு ஒத்திருக்கின்றதல்லவா? மேகத்தின் கருநிறம் ஊழி முதல்வனுடைய உருவத்தை நினைவுபடுத்துகின்றது. மழை பெய்யும்பொழுது மேகங்களிடையே பளிச் பளிச் என்று மின்னல் வெட்டு காணப்பெறுகின்றது. அந்த மின்னல் அவனுடைய திருவாழியை நினைவுபடுத்துகின்றது" மின்னலுக்குப்பின் கேட்கப்பெறும் இடியோசை அவன் கையிலுள்ள வலம்புரிச் சங்கின் நாதத்தை நினைவுபடுத்து கின்றது. மழைக் காலத்தில் சில சமயம் வானத்தில் தோன்றும் வானவில், அவனுடைய சார்ங்கம் என்ற வில்லின் அறிகுறியாகத் தோன்றுகின்றது. 'சோ' என்று பெய்யும் மழையோ வில்லிலிருந்து வெளிப்படும் அம்புமாரியை நினைவிற்குக் கொண்டுவருகின்றது. ஆகவே, அந்த ஆயச் சிறுமியர்,

  ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி 
  ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கருத்து 
  பாழியங் தோளுடைப் பற்பகா பன்கையில் 
  ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து 
  தாழாதே சார்ங்கம் உதைத்த சரமலைபோல் 
  வாழ உலகினில் பெய்திடாய் 
                               (திருப்.4)