பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11. திருத்தில்லை நிகழ்ச்சிகள்

இறைவனின் கனக்கிலாத் திருக்கோலத்தைக் கழுக்குன்றத்தில் கண்டு களித்த வாதவூரடிகளின் சிந்தை அந்தமிலா.ஆனந்தம் அணிகொள் தில்லையை நாடுகின்றது. மனத்திலும்,

  போவோம் காலம் வந்ததுகாண்
  பொய்விட் டுடையான் கழல்புகழவே
                               -யாத். பத்து.1

என்ற எண்ணம் முகிழ்க்கின்றது. உள்மனத்தின்கண் தில்லைச் சிற்றம்பலவனின் சிலம்பொலி கேட்கின்றது. சிவப்பேறு அடையும் நாளும் கிட்டி வருகின்றது. எனவே, தில்லையை நோக்கிப் புறப்படுகின்றார். இத்தில்லைப் பயணம்தான் இருவினை கெட்டுப் பிறப்பிறப்புத் துன்பமும் நீங்கிப் பரமானந்தப் பெருவெளியில் கலக்கச் செய்யும் திருப்பயணமாக முடியப்போகின்றது. இகவுலகவாழ்க்கை முடிந்து பரவுலக வாழ்க்கையின் அருணோதயக் கதிர்கள் வீசத் தொடங்குகின்றன. இந்தச் சிவானந்த சோதியின் கதிர்களில் இவர் உள்ளம் தோயத் தொடங்குகின்றது. சிற்றம்பலவன் திருக்கோயில் சற்றேறக் குறைய நாற்பது ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இத்தில்லைப் பெருங் கோயிலினுள் ஐந்து சபைகள் உள்ளன. அவை :

(1) நடராசப் பெருமான் திருநடம் புரியும் சிற்றம்பலம் அல்லது சிற்சபை,