பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 மாணிக்கவாசகர்



பொருட்டுப் பரமன் அன்னவர்களைத் தண்டித்தார். தாங்கள் திருந்தியமையத் தீர்மானம் செய்துகொண்டதே தேவர்களுக்கு வெற்றியாகும். இந்த அகில வாழ்க்கையே குறைபாடுடையது. அதில் ஈடுபடுகின்றவர்கள் தேவர்களேயானாலும் அவர்கள் துன்பப்பட்டே ஆகவேண்டும். சீவர்கள் எல்லோருக்குமே துன்பம் என்னும் தண்டனை வந்தமைகின்றது. துன்பத்தினின்று விடுபடுதற்பொருட்டு அவர்கள் மேல்நிலை எய்துகின்றனர். இறைவனுடைய அருள் இங்ஙணம் மறக்கருணையாக வந்தமைகின்றது. பரநிலை எய்தும்வரை துக்கமுண்டு என்பதை முக்கண்ணன் உயிர்களுக்கு சிக்கலைக் கொடுத்து அறிவுறுத்துகின்றான்.

43. திருப்பொன்னுரசல் (16)

இங்கு ஊசல் என்பது ஊஞ்சலைக் குறிக்கும். ஊஞ்சலில் ஏறியாடுதல் மகளிர்க்கு மனமகிழ்ச்சி விளைவிக்கும் விளையாட்டாகும். இளமகளிர் ஊசலில் ஏறிவிளையாடுங்கால் பாட்டுடைத் தலைவனது புகழ்திறத்தைப் பாடிக் கொண்டு ஆடும் நிலையில் அமைந்த இசைப்பாட்டு ஊசல்வரி என்று வழங்கும். சிலப்பதிகாரம் வாழ்த்துக் காதையில் ஊசல்வரிப்பாடல்கள் மூன்றும் சேர மன்னனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப் பெற்றவை. இங்ஙணமே சிவபெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஊஞ்சலாடும் மகளிர் பாடிப் பரவும் நிலையில் மாணிக்கவாசகப் பெருமான் அருளிய பனுவல் 'திருப்பொன்னூசல் என்பது, மகளிர் பொன்னாற் செய்த ஊஞ்சலில் இருந்து இறைவன் புகழைப் பாடிக்கொண்டு ஒருவரையொருவர் பொன்னுரசல் ஆடாமோ? என்று வினவுவதாக அமைந்தது இப்பக்திப் பனுவல். இதற்கு அருட்சுத்தி எனக் கருத்துரைத்தனர் முன்னோர். அருட் சுத்தியாவது, ஆன்மா தன்முனைப்பழிய அருளொடு கூடுதல்