பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306 மாணிக்கவாசகர்



பின்னர் உலகத்தார் அறிய மணந்து கொண்டு மனையறம் நிகழ்த்தி இன்புற்று வாழ்தலாகிய உலகியல் வாழ்வு. தொல்காப்பியம், இறையனார் களவியல், சங்கச்செய்யுள் இவற்றில் உலகியல் ஒழுக்க வரலாறு பற்றி எடுத்தோதப் பெற்ற களவு, கற்பு என்னும் அகத்திணையின் இன்ப வரலாறே இத்தெய்வப் பனுவலில் விளக்கப்பெறும் உலக நூல் வழக்காகும்.

அறம் முதலாகிய உறுதிப் பொருள் நான்கினுள் இன்பத்தை நுதலிய களவொழுக்கமாகிய அகனைந்திணை விரிந்துரைக்க எழுந்த நூல் திருக்கோவையார். ஆயினும் இப்பனுவலில் பாட்டுடைத் தலைவன் தில்லையம்பலக் கூத்தனையும், அவன் ஐந்தொழில் கூத்தியற்றியருளும் பர ஞான அருள் வெளியாகிய தில்லைச் சிற்றம்பலத்தையும் போற்றிப் பரவும் முறையில் அமைந்த நூற்பகுதிகள் அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளுடன் சிந்தையும் மொழியும் செல்லா நிலைமைத்தாகிய வீடுபேற்றின் திறத்தினையும் இனிது புலப்படுத்தும் நிலையில் அமைந்துள்ளனர். ஆதலால் இந்நூல் நான்கு குறிக்கோள் பொருள்களையும் பயக்கும் நிலையில் அருளிச் செய்யப் பெற்றுள்ளது என்று கருதுதல் பொருந்தும்.

அகப்பொருள் ஒழுகலாற்றினைப் பாடுவதற்குக் கலிப்பா, பரிபாடல் ஆகிய இருவகைப் பாக்களே சிறப்புரிமை யுடையன எனக் கூறுவர் தொல்காப்பியர். ஆனால் சங்கப் பாடல்கள் (கலித்தொகை, பரிபாடல்களைத் தவிர) இந் நியதியைப் பின்பற்றி அமையவில்லை; அவை யாவும் ஆசிரியப்பாவிலேயே அமைந்தன. கோவைப் பிரபந்தம் பாட எண்ணிய பிற்காலச் சான்றோர் தொல்காப்பியர் கருத்தினைப் பின்பற்றி தாம் எடுத்துக் கொண்ட கோவையினைக் கலிப்பாவின் இனமாகிய கட்டளைக் கலித்துறை யாப்பில் அமைத்துப் பாடுதலை வழக்கமாகக் கொண்டனர். ஆகவே, இக்கோவையில் கட்டளைக் கலித்துறை