பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16. அருளிச் செயல்களில் அடிகள்

"கவிதை வாழ்விலிருந்து மலர்ந்தது: வாழ்விற்கே உரியது; வாழ்விற்காகவே நிலைபெற்றுள்ளது” 1 என்று அட்சன் என்ற திறனாய்வாளர் கூறுவர். பொதுவாகக் கவிதைக்குக் கூறப்பெற்ற இக்கருத்து பக்திக் கவிதைகட்கும் அருட்கவிதைகட்கும் முற்றிலும் பொருந்தும், அருட்கவிஞர்கள் தாம் கவிதையைப் படைக்கவில்லை என்றும், தம்மை ஏதோ ஒன்று படைக்கச் செய்கின்றது என்றும், தாம் அதற்குக் கருவியே என்றும் கூறுகின்றனர். நம்மாழ்வார்,

  என்றைக்கும் என்னையுய்
     யக்கொண்டு போகிய 
  அன்றைக்கு அன்றுஎன்னைத்தன்
     னாக்கிஎன் னால்தன்னை 
  இன்தமிழ் பாடிய
     ஈசனை               (திருவாய் 7.9 : 1) 

என்றும்,

  என்சொல்லால் யான்சொன்ன 
     இன்கவி என்பித்துத் 
  தன்சொல்லால் தான்தன்னைக்
     கீர்த்தித்த மாயன் (க்ஷ 7.9 : 2) 

1. "Poetry is made out of life, belongs to life,exists for life"—Hudson : An introduction to the study of literature—P. 92