பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/352

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

334 மாணிக்கவாசகர்



அடைந்தோர் உடம்பைத் துறந்து பெறும் இன்பத்தைச் சீவன்முத்தர் உடம்போடு பெறுகின்றனர். அடிகள் பொருளை விரயம் செய்த செயலை உலகர் நடை முறையில் வைத்து ஆராயப் புகுவது சிற்றறிவும் சிறுதொழிலும் உடைய நம்மனோர்க்கு ஒரு சிறிதும் ஏற்புடையதன்று. தம்மை மறந்து இறைவனையே சிந்திக்கும் செம்மை மனமுடைய சிவஞானிகளின் செயலை இறைவன் தன் செயலாகவே ஏற்றுக் கொள்ளும் இயல்பினனாதலால் அடிகளின் செயலையும் தன் செயலாகவே கொண்டருளுகின்றான்.

   சித்தம் சிவமாக்கிச்
      செய்தனவே தவமாக்கும்
   அத்தன் (318) -திருத்தோனோ-3

என்பது அடிகளின் அநுபவமொழி. மாணிக்கவாசகர் அறிவால் சிவனே என்பது திண்ணம் என்பது சான்றோர் வாய்மொழி[1] அடிகளின்செயல்கள் யாவும் தவச்செயலெனக் கொண்டருளிய இறைவனது எளிமைத் திறமே அடிகளது வரலாற்றால் உலகோருக்கு அறிவுறுத்தப்பெறும் சிறந்த உண்மையாகும்.

குதிரைகள் வந்த வரலாறு : இறைவன் அருளால் குதிரைகள் மதுரையை வந்தடையும் என்று மதுரை ஏகுகின்றார் அடிகள். அடிகள் நம்பிய வண்ணமே பெருந்துறை ஈசனும் அப்பக்கத்தில் திரியும் நரிகளைக் குதிரைகளாக்கி அவற்றைச் செலுத்தும் குதிரைச் சேவகனாகத் தம் பரிசனத்துடன் மதுரைநகரத்தே வந்து தோன்றுகின்றனன். இச்செய்தி,

   ஆண்டுகொண் டருளிய அழகுறு திருவடி
   பாண்டியன் தனக்குப் பரிமா விற்று
   ஈண்டு கனகம் இசையப் பெறாஅது
   ஆண்டான் எங்கோன் அருள்வழி இருப்பத்
   தூண்டு சோதி தோற்றிய தன்மையும் -போற்றித், 37.41


  1. சிவஞான சித்தியார். 11-2