பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 மாணிக்கவாசகர்



துறையை அடைகின்றார் அமைச்சர் வாதவூரர். தம் பரிசனங்களுடன் முகாம் அமைத்துத் தங்குகின்றார்.

இதற்கு முன்னரே, சொக்கலிங்கப் பெருமான் இரு வினையொப்பையும் மலபரிபாகத்தையும் நோக்குகின்றார். இருவினைகளால் உண்டாகும் இன்ப துன்பங்கள் இரண்டையும் ஒரு படித்தாக எண்ணி வாழ்க்கையில் விருப்பு வெறுப்பின்றிப் பழகும் மனநிலையே இருவினையொப்பு என்று சித்தாந்த நூல்களில் பேசப்பெறும். இந்நிலை எய்திய உயிர்களுக்கு ஆணவமலம் கழன்றொழியும் தகுதி ஏற்படுகின்றது. இத்தகுதியினை மலபரிபாகம் என வழங்குதல் மரபு. இங்ங்னம் இருவினையொப்பும் மலபரிபாகமும் வந்து எய்திய நிலையில் உயிரினது அறிவின் கண்ணே இறைவனது திருவருள் பதியப்பெறும். இந்நிலைதான் சத்தி நிபாதம் என்று பேசப்பெறுவது. நிபாதம் - வீழ்ச்சி, சத்தி - பதிதல். இஃது இறைவன் திருவருளை நாடி உலகப் பயன் கருதாது, வீடு பேற்றை அவாவி நின்று தம் செயலற்றிருத்தலும், இறைவனை அடையும் நெறியாதென ஆராய்தலும், அகத்தால் உலகத்தை முற்றும் துறந்து புறத்தே உலகியலோடு ஒத்து வாழ்தலும், அகத்தும் புறத்தும் உலகினை முற்றத் துறந்து சிவஞானம் நல்கும் அருட்குரவன் ஒருவனையே நாடித் திரிதலும் என இவ்வருட் பதிவு நான்கு வகைப்படும். 5 இவற்றுள் நாலாம் சத்தி நிபாதமாகிய முடிந்த நிலையில் நிற்பவர் திருவாதவூரர்.


5 . சத்தி நிபரதம்-மந்த தரம், மந்தம், தீவிரம், தீவிர தரம் என்று நான்கு வகைப்படும். அரக்கு வெயில்லில் வெதும்புவது, போல்வது மந்த தரம்; வெயிலில் உருகுவது போல்வது மந்தம்; நெய் சூட்டில் இளகுவது போல்வது தீவிரம்; நெய் நெருப்பில் உருகுவ்து தீவிர தரம் என்று பேசப்பெறும். தைலம் இடையறாது ஒழுகுவது போல்வது என்றும் தீவிரதரம் விளக்கப் பெறும். வைணவ் சமயத்தார் பக்தியை இந்நிலைக்குஒப்பாகக் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/40&oldid=1012203" இலிருந்து மீள்விக்கப்பட்டது