பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 மாணிக்கவாசகர்



திருத்தெள்ளேணம் (11)

5 இது மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று என எல்லாக் குறிப்புரைகளும் கூறுகின்றன. சிறுமியர் முச்சில் என்னும் சிறிய முறத்தைக் கையில் கொண்டு தானியங்களைத் தெள்ளிக் கொழித்து விளையாடும் நிலையில் இறைவனுடைய புகழ்த்திறங்களைத் தெளிந்துணர்ந்து பாடிப் போற்றுவதாக அமைந்தது இப் பனுவல். இதனால் இது தெள்ளேணம் என்ற திருநாமமும் பெறுகின்றது. சிறிய முறத்தால் தெள்ளிப் புடைத்தலாகிய இது தெள்ளத் தெறுதல் எனத் தாண்டவராயர் உரையில் குறிக்கப் பெற்றுள்ளது. தெள்ளுதல் என்பது, தானியம் முதலியவற்றைக் கல்லும் மண்ணுமாகிய குற்றங்களைப் புடைத்தொதுக்கித் துயனவாகத் தனியே பிரித்தெடுத்த லாகும். 'தெள்ளத்தெறுதல்’ என்னும் இச்சொல்லின் உண்மை உருவம் தெள்ளத் தேறுதல் என்பதாகும். பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ என்று அடிகளார் குறிப்பிடுவ தால் பாட்டுக்கேற்பக் கைகொட்டியோ பறைகொட்டியோ இயற்றப்பெறும் விளையாட்டாக இருக்கலாம் எனக் கருத வும் இடம் உண்டு. இப்பனுவலுக்கு "சிவனோடடைவு-சிவனோடு சென்று கூடுதல்" எனப் பழைய குறிப்புகள் கூறுகின்றன. ஆன்மாவாகிய தாம் ஆன்ம நாயகனாகிய சிவனுடைனே கூடி இன்புறும் திறத்தை உலகத்தார் அறியும் முறையில் அடிகளார் விரித்துரைக்கும் முறையில் நடைபெறுகின்றது இப்பனுவல். 'சிவமான வாபாடி (4), தேவானவாபாடி (7), "பரஞ்சோதி தித்திக்குமாபாடி (12), கழல் நான் மறவா வண்ணம் நல்கிய அத்திறம்பாடி’ (s) என்பன போன்ற அடிகளின் அநுபவ மொழிகளால் இக்கருத்து தெளிவாகின்றது.


5. இதுவும் தில்லையில் அருளிச் செய்யப் பெற்றதாகத் திருவாதவூரர் புராணம் கூறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/98&oldid=1014174" இலிருந்து மீள்விக்கப்பட்டது